விவசாயி முதல் நெசவாளி வரை... ஏப்.16-ல் தவெக தேர்தல் அறிக்கை! விஜய்யின் 'மாஸ்டர்' வாக்குறுதிகள்! - முழு பிரச்சார வீடியோ!
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொள்கை முழக்கங்கள் மற்றும் தொலைநோக்குத் திட்டங்கள் அடங்கிய முழுமையான தேர்தல் அறிக்கை வரும் ஏப்ரல் 16, 2026 அன்று புத்தகமாக வெளியிடப்படும் என அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் நடைபெற்ற மாபெரும் தேர்தல் பரப்புரையில் இதனைத் தெரிவித்த அவர், திருப்பூரின் வாழ்வாதாரப் பிரச்சனைகளை மையமாக வைத்துப் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
விவசாயிகளின் நீண்டகாலக் கோரிக்கைகளை ஏற்று, தனது பரப்புரையில் விஜய் பின்வரும் அதிரடி அறிவிப்புகளைச் செய்தார்: 5 ஏக்கருக்குக் குறைவான நிலம் கொண்ட விவசாயிகளின் அனைத்து வேளாண் கடன்களும் 100% தள்ளுபடி செய்யப்படும். 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருப்பவர்களுக்கு 50% தள்ளுபடி வழங்கப்படும். நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500 மற்றும் கரும்பு ஒரு டன்னுக்கு ரூ. 4,500 என உயர்த்தி வழங்கப்படும்.
திருப்பூர் மாவட்டத்தின் முதுகெலும்பாக விளங்கும் பின்னலாடைத் தொழிலைக் கருத்தில் கொண்டு விஜய் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்: நலிந்து வரும் ஜவுளி மற்றும் பின்னலாடைத் தொழிலைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும் 'தனி வாரியம்' அமைக்கப்படும். மூலப்பொருட்களின் விலை ஏற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள சிறு, குறு தொழில்களுக்குத் தடையற்ற மின்சாரம் மற்றும் கூடுதல் மின்சார மானியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
வடமாநிலத் தொழிலாளர்கள் மற்றும் உள்ளூர் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தனி கண்காணிப்பு மையம் மற்றும் தொழிலாளர் நல நிதியம் உருவாக்கப்படும்.
ஏற்கனவே திமுக, அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுள்ள நிலையில், "எங்கள் அறிக்கை வெறும் காகிதம் அல்ல, மக்களின் உணர்வு" என்று குறிப்பிட்ட விஜய், வரும் ஏப்ரல் 16-ஆம் தேதி தவெக-வின் முழுமையான தேர்தல் அறிக்கையை வெளியிட உள்ளதாகத் தெரிவித்தார். கல்வி, வேலைவாய்ப்பு, பெண்களுக்கு மாதம் ரூ. 3,000 நிதியுதவி போன்ற ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களுடன், மேலும் பல 'சர்ப்ரைஸ்' திட்டங்கள் அந்தப் புத்தகத்தில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருப்பூர் உரையில் ஆளுங்கட்சியை மறைமுகமாகச் சாடிய விஜய், "திருப்பூரில் வேட்பாளர் மயங்கியது முதல் மக்கள் மயங்கியது வரை அனைத்தையும் ஒரு பாடமாக எடுத்துக்கொள்வோம். தடைகளைத் தகர்த்து, வரும் ஏப்ரல் 16-ல் வெளியாகும் எங்கள் தேர்தல் அறிக்கை, மற்ற கட்சிகளின் தூக்கத்தைக் கலைக்கும்" என ஆக்ரோஷமாகப் பேசி தனது உரையை நிறைவு செய்தார்.