காலாப்பட்டு முதல் உப்பளம் வரை... புதுவையில் இன்று விஜய் பிரச்சாரம்!

 

முதல் கோணல் முற்றிலும் கோணல் என்று  கொக்கரிக்கிறார்கள் எதிர்கட்சியினர். கட்சி துவங்கிய போது இருந்த வேகம், அதற்கடுத்து தவெகவுக்கு தொடர் சறுக்கலாக இருந்து வருகிறது. எதிர்பார்த்தப்படி கூட்டணிக்கு வேறு எந்த கட்சியுமே ஆர்வம் காட்டவில்லை. கடைசி வரையில் எதிர்பார்த்திருந்த காங்கிரஸுக்கும், வேண்டிய இடங்கள் கிடைக்காவிட்டாலும், திமுகவை பகைத்துக் கொள்ள தயாராக இல்லை. விஜய் பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களில் தொடர்ந்து குளறுபடி என்று ஏகப்பட்ட சர்ச்சைகள். இந்நிலையில் இன்று புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, ஒரு நாள் முழுவதும் விஜய் தீவிரப் பிரச்சாரம் செய்யவுள்ளார். 

புதுச்சேரியின் முக்கியப் பகுதிகளில் தவெக வேட்பாளர்களை அறிமுகம் செய்து, மக்களிடையே விஜய் வாக்குச் சேகரிக்கவுள்ள நிலையில், அவரது உத்தேசப் பயண விவரங்கள் வெளியாகி உள்ளது. காலை 9:30 மணி: காலாப்பட்டு நுழைவாயில் (பிரச்சாரத் தொடக்கம்), காலை 10 மணிக்கு முதியால்பேட்டை மணிகுண்டு, காலை 10:30 மணி: அதிதி ஹோட்டல் சிக்னல், காலை 11 மணி: உப்பளம் வாட்டர் டேங்க் அருகில்.

தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் 30 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்யின் இந்தப் பிரச்சாரப் பயணம், புதுச்சேரியில் உள்ள இளைஞர்கள் மற்றும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, இன்று சென்னையில் 234 தொகுதி வேட்பாளர்களையும் அறிமுகம் செய்த கையோடு, அடுத்தகட்டமாகப் புதுச்சேரிக்கு அவர் முக்கியத்துவம் அளிப்பது அரசியல் வட்டாரத்தில் உற்று நோக்கப்படுகிறது.

புதுவையில் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ள நிலையில், அவரது வாகனத்தை யாரும் பின்தொடர வேண்டாம் என்று ஆனந்த் கேட்டுக் கொண்டுள்ளார். அதே சமயம் பெரம்பூரில் தாக்கல் செய்திருந்த பிரமாணபத்திரத்தை திருத்தம் செய்து விஜய் தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வயதையும், வழக்கு குறித்த விவரங்களையும் திருத்தம் செய்து, தாக்கல் செய்யும் பணிகளும் நடைபெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது.