கடன் தள்ளுபடி முதல் பென்ஷன் வரை... எகிறும் எதிர்பார்ப்பு... இன்று திமுக தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார் ஸ்டாலின்!

 

அறிவாலயத்தில் இன்று மாலை நடைபெறும் பிரம்மாண்ட நிகழ்ச்சியில், திமுகவின் 2026 சட்டமன்றத் தேர்தல் அறிக்கையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிடுகிறார். கடந்த 2021 தேர்தலைப் போலவே, இந்த முறையும் மக்களைக் கவரும் வகையிலான அதிரடி வாக்குறுதிகள் இதில் இடம்பெற உள்ளன.

தற்போது வழங்கப்பட்டு வரும் ரூ.1,000 உரிமைத்தொகையை ரூ.1,500 அல்லது ரூ.2,000 ஆக உயர்த்த வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட விவசாயக் கடன்கள் மற்றும் நகைக் கடன்களைத் தள்ளுபடி செய்வது குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகலாம். பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான 'மாதமொருமுறை மின்கட்டணம் செலுத்தும் முறை' அமல்படுத்தப்படும் என்ற வாக்குறுதி இடம்பெற அதிக வாய்ப்புள்ளது.

அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்தல். மாணவர்களுக்கான கல்விக் கடன் தள்ளுபடி அல்லது வட்டி குறைப்பு. அரசு வேலைவாய்ப்புகளில் தமிழர்களுக்கு 100% முன்னுரிமை.

சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியம் உயர்வு அல்லது பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பதற்கான மாநில அரசின் நடவடிக்கைகள். ஏற்கனவே அதிமுக மற்றும் பாஜக கூட்டணிகள் வேட்பாளர்களை அறிவித்து வரும் நிலையில், திமுகவின் இந்தத் தேர்தல் அறிக்கை அக்கட்சிக்கு ஒரு பெரிய 'பூஸ்ட்' ஆக இருக்கும் எனக் கருதப்படுகிறது. குறிப்பாக, இல்லத்தரசிகள் மற்றும் இளைஞர்களைக் கவரும் வகையிலான திட்டங்களுக்கு இதில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.