திருச்செந்தூர் முதல் கந்தகோட்டம் வரை... கந்தசஷ்டி விரதம் தொடங்கியது.... அதிகாலையிலேயே முருகர் கோவில்களில் குவிந்த பக்தர்கள்!
இன்று முருகனின் அறுபடை வீடுகள் உட்பட தமிழகம் முழுவதும் முக்கிய ஆலயங்களிலும் கந்தசஷ்டி விழா தொடங்கியது. அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்து ‘அரோகரா’ கோஷத்துடன் வழிபட்டனர். ஐப்பசி மாத கந்தசஷ்டி விரதம் இன்று தொடங்கிய நிலையில் நவம்பர் 15ம் தேதி சூரசம்ஹாரமும், நவம்பர் 16ம் தேதி திருக்கல்யாணமும் நடைபெறுகிறது.
தமிழர் இதயத்தில் ‘தமிழ் கடவுள்’ எனப் போற்றப்படும் முருகப்பெருமான், அசுரன் சூரபத்மனை வதம் செய்த இந்த நாள், தர்மம் வெற்றி பெற்று தீமை ஒழிந்த தினமாக கருதப்படுகிறது. தீபாவளிக்குப் பின் அமாவாசை பிரதமையிலிருந்து சஷ்டி வரை ஆறு நாட்கள் அனுஷ்டிக்கப்படும் கந்தசஷ்டி விரதம் இன்று தொடங்கியது.
இதனையொட்டி சென்னையின் முக்கிய முருகன் திருத்தலங்களான வடபழனி முருகன் கோவில், பாரிமுனை கந்தகோட்டம் கந்தசாமி கோவில், குன்றத்தூர் சுப்பிரமணிய சாமி கோவில், வல்லக்கோட்டை முருகன் கோவில், திருப்போரூர் சுப்ரமணிய சாமி கோவில், மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் இணைந்துள்ள முருகர் சந்நிதிகளில் பக்தர்கள் குவிந்து முருகனை தரிசித்து விரதத்தைத் தொடங்குகின்றனர்.
அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் லட்சக்கணக்கில் திரண்டனர். கந்தசஷ்டி விழாவினையொட்டி கடற்கரையோரம் பெருமளவில் பக்தர்கள் கூடியிருந்தனர்.
இன்று தொடங்கும் கந்தசஷ்டி விழா நவம்பர் 15ம் தேதி சூரசம்ஹாரமும், நவம்பர் 16ம் தேதி திருக்கல்யாணத்துடனும் இந்த ஆண்டுக்கான கந்தசஷ்டி விழா நிறைவடையும் என அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.