திருச்செந்தூர் முதல் கந்தகோட்டம் வரை... முருகர் கோவில்களில் இன்று சூரசம்ஹாரம்!
இன்று முருகனின் அறுபடை வீடுகள் உட்பட பிற முக்கிய ஆலயங்களிலும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஐப்பசி மாத கந்தசஷ்டி விரதத்தின் உச்சநிகழ்வாகிய சூரசம்ஹாரம் வடபழனி, பாரிமுனை கந்தகோட்டம், திருச்செந்தூர், வல்லக்கோட்டை என பல முருகன் கோவில்களில் இன்று மாலை நடைபெறுகிறது.
தமிழர் இதயத்தில் ‘தமிழ் கடவுள்’ எனப் போற்றப்படும் முருகப்பெருமான், அசுரன் சூரபத்மனை வதம் செய்த இந்த நாள், தர்மம் வெற்றி பெற்று தீமை ஒழிந்த தினமாக கருதப்படுகிறது. தீபாவளிக்குப் பின் அமாவாசை பிரதமையிலிருந்து சஷ்டி வரை ஆறு நாட்கள் அனுஷ்டிக்கப்படும் கந்தசஷ்டி விரதத்தின் நிறைவு நாளாக சூரசம்ஹாரம் கொண்டாடப்படுகிறது.
இதனையொட்டி சென்னையின் முக்கிய முருகன் திருத்தலங்களான வடபழனி முருகன் கோவில், பாரிமுனை கந்தகோட்டம் கந்தசாமி கோவில், குன்றத்தூர் சுப்பிரமணிய சாமி கோவில், வல்லக்கோட்டை முருகன் கோவில், திருப்போரூர் சுப்ரமணிய சாமி கோவில், மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் இணைந்துள்ள முருக சந்நிதிகளில் சூரசம்ஹார விழா இன்று மாலை நடத்தப்படுகிறது.
அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோவிலில் லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். சூரசம்ஹார நிகழ்வைக் காண கடற்கரையோரம் பெருமளவில் பக்தர்கள் கூடி உள்ளனர். திருச்செந்தூரில் அரோகரா கோஷம் விண்ணைப் பிளக்கிறது.
இன்று மாலை சூரசம்ஹாரம் நடைபெற உள்ள நிலையில், அதனையொட்டி நாளை மாலை முருகன், தெய்வானை வள்ளி திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. இதன் மூலம் இந்த ஆண்டுக்கான கந்தசஷ்டி விழா நிறைவடையும் என அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.