இல்லத்தரசிகளே உஷார்... பிரபல நிறுவனத்தின் சீரகத் தூளை திரும்பப் பெற FSSAI உடனடி உத்தரவு!
சீரகப் பொடியில் அனுமதிக்கப்பட்ட அளவை விட பூச்சிக்கொல்லி எச்சங்கள் அதிகமாக இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டதை தொடர்ந்து, பிரபல நிறுவனத்தின் குறிப்பிட்ட பேட்ச் சீரகப் பொடியை சந்தையில் இருந்து உடனடியாக திரும்பப் பெற இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) உத்தரவிட்டுள்ளது.FSSAI மேற்கொண்ட வழக்கமான உணவுப் பொருள் ஆய்வின்போது, எவரெஸ்ட் ஃபுட் புராடக்ட்ஸ் நிறுவனத்தின் பேக்கிங் செய்யப்பட்ட சீரகப் பொடி மாதிரி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இந்த மாதிரியில் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச அளவை விட 2 வகையான பூச்சிக்கொல்லி எச்சங்கள் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து உணவு பகுப்பாய்வு ஆய்வகம் அந்த மாதிரியை பாதுகாப்பற்றது என அறிவித்தது. பின்னர் மேற்கொள்ளப்பட்ட மேல்முறையீட்டு பரிசோதனையிலும் இதே முடிவு உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட சீரகப் பொடியின் முழு பேட்சையும் சந்தையில் இருந்து உடனடியாக திரும்பப் பெற FSSAI உத்தரவிட்டுள்ளது. இந்த நடவடிக்கை குறிப்பிட்ட பேட்சுக்கே பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்த பொருளின் பேட்ச் எண் E080668761 என தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, பொதுமக்கள் தங்களிடம் உள்ள எவரெஸ்ட் சீரகப் பொடி பாக்கெட்டில் பேட்ச் எண்ணை சரிபார்த்துக் கொள்வது அவசியம்.
உணவுப் பொருட்களின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், FSSAI தொடர்ந்து சந்தையில் உள்ள பொருட்களின் மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்து வருகிறது. விதிமுறைகளை மீறும் பொருட்கள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு திரும்பப் பெறுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே, இதே நாளில் மற்றொரு உணவு நிறுவனத்தின் உரிமமும் கடுமையான சுகாதார மற்றும் உணவு பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக FSSAI-யால் இடைநிறுத்தப்பட்டுள்ளது.சீரகப் பொடியை பயன்படுத்தும் பொதுமக்கள், குறிப்பாக குறிப்பிட்ட பேட்ச் எண்ணைக் கொண்ட பொருளை வாங்கியிருந்தால், அதைப் பயன்படுத்துவதற்கு முன்பு FSSAI வெளியிட்டுள்ள தகவல்களை சரிபார்ப்பது பாதுகாப்பானது.