undefined

முழு லிஸ்ட்... மாவட்ட வாரியான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு -  செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிக வாக்காளர்கள்! 

 

தமிழகத்தில் 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றப் பொதுத்தேர்தலுக்கான முன்னேற்பாடாக, மாநிலத்தின் அனைத்து 234 தொகுதிகளுக்குமான இறுதி வாக்காளர் பட்டியலை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் இன்று வெளியிட்டனர்.

தமிழகத்திலேயே அதிக வாக்காளர்களைக் கொண்ட மாவட்டமாக செங்கல்பட்டு உருவெடுத்துள்ளது. இங்கு மொத்தம் 22.60 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 11,04,511 பேரும், பெண் வாக்காளர்கள் 11,55,144 பேரும் அடங்குவர். குறிப்பாக, சென்னை புறநகர்ப் பகுதிகளை உள்ளடக்கிய சோழிங்கநல்லூர் தொகுதி, மாநிலத்தின் மிகப்பெரிய தொகுதியாகத் தொடர்ந்து நீடிக்கிறது.

தலைநகர் சென்னை 21.55 லட்சம் வாக்காளர்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. இங்கு ஆண் வாக்காளர்கள் 10,62,490 பேரும், பெண் வாக்காளர்கள் 10,92,312 பேரும் உள்ளனர். அதனைத் தொடர்ந்து, தொழில் நகரமான கோயம்புத்தூர் 21.12 லட்சம் வாக்காளர்களுடன் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 20.15 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை (10.23 லட்சம்) ஆண்களை விட (9.91 லட்சம்) அதிகமாக உள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் 16.25 லட்சம் வாக்காளர்களைக் கொண்டுள்ள இந்த மாவட்டத்தில், பெண் வாக்காளர்கள் 8.19 லட்சமாகவும், ஆண்கள் 8.05 லட்சமாகவும் உள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில், மொத்த வாக்காளர் எண்ணிக்கை 15.10 லட்சம். இங்கு 144 பேர் மூன்றாம் பாலினத்தவராகப் பதிவு செய்யப்பட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் 14.97 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் பெண் வாக்காளர்கள் 7.68 லட்சம் பேரும், ஆண்கள் 7.28 லட்சம் பேரும் உள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 11.92 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இங்கும் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை (6.13 லட்சம்) முன்னிலையில் உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் 11.10 லட்சம் வாக்காளர்களைக் கொண்டுள்ள இந்த மாவட்டத்தில், மூன்றாம் பாலினத்தவர் 38 பேர் உள்ளனர்.

தமிழகத்தின் ஒட்டுமொத்தப் பட்டியலையும் ஆராயும்போது, பெரும்பாலான மாவட்டங்களில் ஆண் வாக்காளர்களை விடப் பெண் வாக்காளர்களே அதிக எண்ணிக்கையில் உள்ளனர். இது தேர்தல் முடிவுகளில் பெண்களின் வாக்குகள் எவ்வளவு முக்கியமானது என்பதை உணர்த்துகிறது. மேலும், மூன்றாம் பாலினத்தவர் எண்ணிக்கை சென்னையில் 743 ஆகவும், செங்கல்பட்டில் 381 ஆகவும் பதிவாகியுள்ளது.

சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளுக்கு பிறகு, சுமார் 97 லட்சம் பெயர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையத் தரவுகள் தெரிவிக்கின்றன. இறந்தவர்கள், முகவரி மாறியவர்கள் மற்றும் இரட்டைப் பதிவுகளை நீக்கிய பிறகு இந்தத் துல்லியமான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. புதிய வாக்காளர் அடையாள அட்டைகள்   விரைவாகத் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும்.