இன்று இறுதிசடங்குகள்... ஏழு தசாப்த காலப் பயணம்.. சௌகார் ஜானகியின் உடலுக்கு திரைத்துறையினர் அஞ்சலி.. பெசன்ட் நகர் மின் மயானத்தில் உடல் தகனம்!
இன்று நடிகை சௌகார் ஜானகியின் இறுதி ஊர்வலம் நடைபெறுகிறது.. பெசன்ட் நகர் மின்மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் காலமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் அவர் நடித்து வெளியான ‘செளகார்’ படத்தின் மூலம் ஜானகி தனது பெயருக்கு முன்பாக செளகார் என்ற அடைமொழியைச் சேர்த்துக் கொண்டார்.
செளகார் ஜானகியின் மறைவு பேரிழப்பு என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தெரிவித்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "பழம்பெரும் திரைப்பட நடிகையும், தனது தனித்துவமான நடிப்பால் பல தலைமுறை ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தவருமான சௌகார் ஜானகி உடல்நலக் குறைவால் காலமான செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்" என்று தெரிவித்துள்ளார்."திரைத்துறையில் 70 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயணித்து, எண்ணற்ற கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டிய அவரது கலைப்பணி என்றும் போற்றத்தக்கது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற பல்வேறு மொழிப் படங்களில் நடித்து சாதனை படைத்த அவர் பத்மஸ்ரீ விருது, கலைமாமணி விருது, நந்தி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். சௌகார் ஜானகி அவர்களின் மறைவு திரையுலகத்திற்குப் பேரிழப்பு" என்று குறிப்பிட்டுள்ளார்.
வயது மூப்பு சார்ந்த உடல்நலப் பிரச்சனைகள் காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் 1:59 மணியளவில் இயற்கை எய்தினார். அவரது உடல் பொதுமக்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்களின் அஞ்சலிக்காகச் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர், தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், கமல்ஹாசன் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
1950-ல் 'ஷாவுகாரு' என்ற தெலுங்குத் படத்தின் மூலம் அறிமுகமான இவர், தமிழில் 'வளையாபதி' (1952) படம் மூலம் காலடி எடுத்து வைத்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் 300-க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களிலும் நடித்துள்ளார். இந்திய அரசின் பத்மஸ்ரீ, தமிழக அரசின் கலைமாமணி மற்றும் ஆந்திர அரசின் நந்தி விருதுகளைப் பெற்று திரையுலகிற்குப் பெருமை சேர்த்தவர்.