விண்வெளி வீரர்களின் அவசரகால பாதுகாப்பு! கோவையில் தயாரான ககன்யான் முக்கிய உபகரணம்
இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணத் திட்டமான ககன்யானில் கோவையின் பங்களிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. விண்கலத்தில் அவசரநிலை ஏற்பட்டால் விண்வெளி வீரர்களை பாதுகாப்பாக வெளியேற்ற உதவும் ‘க்ரூ எஸ்கேப் சிஸ்டம்’ தொடர்பான முக்கிய உபகரணத்தை எல் அண்டு டி நிறுவனத்தின் கோவை தொழிற்சாலை தயாரித்து இஸ்ரோவிடம் ஒப்படைத்துள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, ககன்யான் திட்டத்தின் மூலம் இந்திய வீரர்களை விண்வெளிக்கு அனுப்புவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக நான்கு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றனர்.
ராக்கெட் ஏவுதலின்போது அல்லது விண்கலம் விண்ணில் பயணிக்கும் ஆரம்பக் கட்டத்தில் ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால், விண்வெளி வீரர்கள் இருக்கும் பகுதியை ராக்கெட்டிலிருந்து விரைவாகப் பிரித்து பாதுகாப்பான தூரத்துக்கு எடுத்துச் செல்வதே க்ரூ எஸ்கேப் சிஸ்டத்தின் முக்கியப் பணியாகும்.
HUMAN SPACE FLIGHT CENTRE
ககன்யான்-1, ககன்யான்-2 திட்டங்களுக்குத் தேவையான பல்வேறு பாகங்களை எல் அண்டு டி நிறுவனம் தயாரித்து வருகிறது. கோவையில் இதுவரை நான்கு க்ரூ எஸ்கேப் தொடர்பான பாகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் தயாரிக்கப்பட்ட உபகரணமும் இஸ்ரோவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் இந்தியாவின் விண்வெளி மனிதப் பயணத் திட்டத்தில் கோவை தொழில்துறையின் பங்களிப்பு மேலும் கவனம் பெற்றுள்ளது.