சூதாட்ட செயலி விளம்பரம்.. நடிகை நிதி அகர்வால் நேரில் ஆஜர்!
சட்டவிரோத ஆன்லைன் சூதாட்டச் செயலிகளை விளம்பரப்படுத்தியதில் நடைபெற்ற பணப்பரிவர்த்தனைகள் தொடர்பான வழக்கில், நடிகை நிதி அகர்வால் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜரானார்.
ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களை விளம்பரப்படுத்தியதற்காக பெறப்பட்ட சம்பளம், கமிஷன் தொகைகள் மற்றும் ஹவாலா வழியிலான பணப்பரிவர்த்தனைகள் குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்து வருகின்றனர்.
தொழிலதிபர் பணீந்திர சர்மா அளித்த புகாரின் பேரில், மியாபூர் காவல்துறையினர் முதற்கட்ட எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து பணமோசடி தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறை விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது.
இந்த வழக்கில் நிதி அகர்வால் தவிர்த்து ராணா டக்குபதி, பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, மஞ்சு லட்சுமி உட்பட 20-க்கும் மேற்பட்ட திரை பிரபலங்கள் மற்றும் சமூக வலைதள செல்வாக்காளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே தெலங்கானா குற்றப்பிரிவு (CID) காவல்துறையினரால் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், தற்போது அமலாக்கத்துறை தனது தளத்தில் விசாரணையை விரிவுபடுத்தியுள்ளது.