நாடு முழுவதும் களைகட்டிய விநாயகர் சதுர்த்தி விழா: பிரம்மாண்ட சிலைகளை பிரதிஷ்டை செய்து சிறப்பு வழிபாடு!

 

முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானின் அவதார தினமான விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் மிகுந்த கோலாகலத்துடனும் உற்சாகத்துடனும் கொண்டாடப்பட்டது.

புகழ்பெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு மூலவருக்குத் தங்க கவச அலங்காரமும், மதியம் முக்குறுணி மோதகம் படைத்து சிறப்புப் பூஜைகளும் நடைபெற்றன. திருச்சி உச்சிப் பிள்ளையார் கோவில் மற்றும் புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் 21 வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டுத் தங்கக் கவசம் மற்றும் கற்பக விருட்ச அலங்காரத்தில் விநாயகர் அருள்பாலித்தார்.

வீடுகளில் மக்கள் சிறிய அளவிலான சிலைகளை வைத்து கொழுக்கட்டை, மோதகம், லட்டு, சுண்டல் போன்ற நைவேத்யங்களைப் படைத்து வழிபட்டனர். பொது இடங்களிலும் இந்து அமைப்புகள் சார்பில் பிரம்மாண்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. தமிழ்நாடு முழுவதும் சுமார் 1 லட்சம் சிலைகளும், சென்னையில் மட்டும் 1,562 சிலைகளும் வைக்கப்பட்டுச் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள பகுதிகளில் காவல்துறை சார்பில் தீவிர பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வழிபாடுகள் நிறைவுபெற்றதும், சென்னையில் வரும் 19 மற்றும் 20-ஆம் தேதிகளில் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்கள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர்நிலைகளில் சிலைகள் கரைக்கப்பட உள்ளன.