விநாயகர் சதுர்த்தி: நாவில் கரையும் சுவையான இனிப்பு கொழுக்கட்டை தயாரிப்பது எப்படி? ஈஸியான ரெசிப்பி!

 

விநாயகர் சதுர்த்தி என்றாலே நம் நினைவிற்கு வருவது கொழுக்கட்டை தான். அதிலும் பாரம்பரியமான இனிப்பு கொழுக்கட்டை என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி ருசிப்பார்கள். அனைத்து வயதினரும் ரசித்து சாப்பிடும் வகையில் இந்த சுவையான இனிப்பு கொழுக்கட்டையை மிக எளிமையாக எப்படிச் செய்யலாம் என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

அரிசி மாவு - 1 கப், வெல்லம் - 150 கிராம், வேர்க்கடலை - 100 கிராம், துருவிய தேங்காய் - 1 மூடி, ஏலக்காய் பொடி - 1/2 ஸ்பூன், நெய் - தேவையான அளவு, உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை விளக்கம்

முதலில் எடுத்துக் கொண்ட வேர்க்கடலையை மிக்ஸி ஜாரில் சேர்த்து, நைசாக அரைக்காமல் ஒன்றும் பாதியுமாகப் பொடித்துத் தனியே வைத்துக் கொள்ளவும். பின்னர் அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்துத் தண்ணீர் ஊற்றிச் சூடானதும், அதில் வெல்லம் சேர்த்துச் பாகு காய்ச்சி வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.

அடுப்பில் கடாய் வைத்துச் சிறிதளவு நெய் ஊற்றிச் சூடானதும், துருவிய தேங்காய், அரைத்து வைத்துள்ள வேர்க்கடலை மற்றும் தயாரித்து வைத்துள்ள வெல்லப் பாகு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலந்துவிட வேண்டும். கலவை சற்று கெட்டியாக மாறியவுடன், மீதமுள்ள நெய் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாகக் கிளறி பூரணத்தை இறக்கி வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்ட அரிசி மாவுடன் தேவையான அளவு உப்பு மற்றும் சுடுதண்ணீர் சேர்த்துச் கொழுக்கட்டை மாவு பதத்திற்கு மென்மையாகப் பிசைந்து கொள்ள வேண்டும்.

பிசைந்து வைத்துள்ள மாவிலிருந்து தேவையான அளவு சிறு உருண்டையாக எடுத்து, கைகளால் தட்டி வட்ட வடிவமாக மாற்றி, அதனுள் தயார் செய்து வைத்துள்ள பூரணத்தை வைத்து விளிம்புகளை மடித்து அழகான வடிவத்தில் கொழுக்கட்டைகளைப் பிடிக்கவும்.

பிடித்து வைத்துள்ள கொழுக்கட்டைகளை இட்லி பாத்திரத்தில் வைத்துத் தாராளமாக வேகவைத்து எடுத்தால், கமகமக்கும் மணத்துடன் சுவையான இனிப்பு கொழுக்கட்டை பரிமாறத் தயாராகிவிடும்.