விநாயகர் சிலை ஊர்வலம்.. இன்றும், நாளையும் டாஸ்மாக் கடைகளை மூட கலெக்டர் உத்தரவு!

 

கன்னியாகுமரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு நடைபெறவுள்ள சிலைகள் கரைப்பு ஊர்வலத்தைக் கருத்தில் கொண்டு, சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கும் பொருட்டு குறிப்பிட்ட சில டாஸ்மாக் கடைகளை இரண்டு நாட்களுக்கு மூட மாவட்ட ஆட்சியர் பிரதாப் உத்தரவிட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவினைத் தொடர்ந்து, இன்றும், நாளையும் ஆகிய இரண்டு நாட்களில் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலம் மொத்தம் 11 முக்கிய இடங்களில் நடைபெற உள்ளது.

நாகர்கோவில் முதல் சொத்தவிளை கடற்கரை, மேல்புறம் முதல் குழித்துறை, நாகர்கோவில் முதல் சங்குதுறை கடற்கரை, சுசீந்திரம் முதல் கன்னியாகுமரி, தோவாளை முதல் பள்ளிகொண்டான் அணை, கூனாலுமூடு முதல் மிடாலம், அஞ்சுகண்கலுங்கு முதல் தேங்காய்பட்டணம், செருப்பாலூர் முதல் திற்பரப்பு, வைகுண்டபுரம் முதல் வெட்டுமடை மற்றும் பம்மம் முதல் குழித்துறை உள்ளிட்ட 11 இடங்களில் ஊர்வலங்கள் மற்றும் கரைப்பு நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன.   

ஊர்வலம் நடைபெறும் வழித்தடங்களிலும் அதனுடன் தொடர்புடைய பகுதிகளிலும் சட்டம்-ஒழுங்குப் பிரச்சினைகளைத் தவிர்க்கும் வகையில், அங்கு இயங்கிவரும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் எஃப்.எல். (FL) உரிமம் பெற்ற மதுபானக்கூடங்களை ஊர்வலம் தொடங்கும் நேரம் முதல் முடியும் வரை முழுமையாக மூடி வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.