இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. தவெக எம்எல்ஏ கைது செய்யப்படுவாரா?!
தூத்துக்குடி மாவட்டத்தில் அரங்கேறிய ஒரு கொடூரக் குற்றச்சாட்டை முன்வைத்து நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இடும்பவனம் கார்த்திக் தவெக அரசுக்கு எதிராகப் புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளார்.
இடும்பவனம் கார்த்திக்கின் எக்ஸ் தளப் பதிவில், ஆளுங்கட்சியான தவெக-வின் மீதான கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். "முதலமைச்சர் ஜோசப் விஜய்யை அவதூறாகப் பேசினார் என்ற ஒரே காரணத்திற்காக, எதிர்க்கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனைக் மின்னல் வேகத்தில் கைது செய்யும் காவல்துறை, அதைவிடக் கொடூரமான குற்றச்சாட்டில் சிக்கியுள்ள தங்களது சொந்தக் கட்சிப் புள்ளிகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறது?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பெண் ஒருவரைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த கொடூர வழக்கில், ஸ்ரீவைகுண்டம் தொகுதி தவெக எம்.எல்.ஏ சரவணனுக்குத் தொடர்பு இருப்பதாகக் குற்றம்சாட்டியுள்ள அவர், "எம்.எல்.ஏ சரவணனை எப்போது கைது செய்யப் போகிறீர்கள் முதலமைச்சர் அவர்களே?" எனப் பகிரங்கமாகச் சாடியுள்ளார்.
கடந்த ஜூன் மாதத் தொடக்கத்தில் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் இளம்பெண் ஒருவருக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, தவெக-வைச் சேர்ந்த உள்ளூர் நிர்வாகிகள் சிலர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாகத் தூத்துக்குடி காவல்துறையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் தவெக-வின் இளைஞரணி நிர்வாகியான ஜி.கே. பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட இருவர் மீது முதற்கட்டமாகப் போலீசார் வழக்குப் பதிவு செய்து அவர்களைக் கைது செய்தனர். இந்த விவகாரம் பூதாகரமானதைத் தொடர்ந்து, தவெக தலைவர் ஜோசப் விஜய் உத்தரவின் பேரில் பாலசுப்பிரமணியன் கட்சியின் அடிப்படைப் பொறுப்பிலிருந்து உடனடியாக நிரந்தரமாக நீக்கப்பட்டார்.
இந்த வழக்கில் ஸ்ரீவைகுண்டம் தொகுதி தவெக எம்.எல்.ஏ சரவணனுக்கும், கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் ஏற்கனவே குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தனர். இடும்பவனம் கார்த்திக்கின் இந்தக் கடுமையான கேள்விக்குத் தவெக அரசு மற்றும் காவல்துறை வட்டாரங்கள் தரப்பில் முதற்கட்ட விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன.
"ஸ்ரீவைகுண்டம் கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாகக் குற்றத்தில் நேரடியாகத் தொடர்புடைய நபர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் சட்டமன்ற உறுப்பினர் சரவணனுக்குத் தொடர்பு இருப்பதாகப் பரப்பப்படும் செய்திகளில் உண்மை இல்லை. சட்டத்தின் முன்னால் அனைவரும் சமம் என்பதால், இந்த வழக்கில் யாருடைய தலையீடும் இன்றி முழுமையான விசாரணை தொடர்ந்து நேர்மையாக நடந்து வருகிறது."