கோடம்பாக்கத்தில் கஞ்சா விற்பனை... சினிமா நடனக் கலைஞர் கைது!
சென்னை போரூர் பகுதியில் போலீசார் நடத்திய தீவிர வாகனச் சோதனையில், காரில் கஞ்சா மற்றும் வெளிமாநில மதுபாட்டில்களைக் கடத்தி வந்த கோடம்பாக்கத்தைச் சேர்ந்த சினிமா பின்னணி நடனக் கலைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். வருமானக் குறைவு காரணமாகப் போதைப்பொருள் மற்றும் மதுபானக் கடத்தல் விற்பனையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நிலையில், அவரிடமிருந்து கஞ்சா, மெத்தபெட்டமைன் உள்ளிட்ட போதைப்பொருட்கள் மற்றும் மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சினிமா பின்னணி நடனக் கலைஞர் சாய்கிரண் (28), போரூர் பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தபோது போலீசார் வழக்கமான வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தபோது, அதில் கஞ்சா மற்றும் 60 வெளிமாநில மதுபாட்டில்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.
கஞ்சா மற்றும் வெளிமாநில மதுபாட்டில்கள் கடத்தி வரப்பட்டது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சாய்கிரணை போலீசார் கைது செய்தனர். சினிமா துறையில் போதிய வருமானம் இல்லாமல் வருமானக் குறைவு ஏற்பட்டதால், எளிதில் பணம் ஈட்டும் நோக்கில் கஞ்சா மற்றும் வெளிமாநில மதுபாட்டில்களை வாங்கி விற்பனை செய்து வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.
கோடம்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கஞ்சா மற்றும் போதைப்பொருள் விற்பனையில் அவர் ஈடுபட்டு வந்தாரா, வேறு யாருக்காவது இதில் தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட சாய்கிரணிடம் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், அவரது வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தினர். அந்தச் சோதனையில் 2 கிலோ கஞ்சா, மெத்தபெட்டமைன் போதைப்பொருள் மற்றும் கூடுதல் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட கார், கஞ்சா, மெத்தபெட்டமைன் மற்றும் வெளிமாநில மதுபாட்டில்கள் அனைத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், போதைப்பொருள் விநியோகச் சங்கிலி குறித்துத் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.