ஆந்திராவில் லாரிகளில் கடத்திய ரூ.70 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் - தமிழகத்தைச் சேர்ந்த ஓட்டுநர்கள் உட்பட 5 பேர் கைது!
ஒடிசா மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு லாரிகள் மூலமாகப் பெருமளவில் கஞ்சா கடத்தப்படுவதாக ஆந்திர மாநிலம் என்.டி.ஆர். மாவட்ட போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மாவட்ட போலீஸ் கமிஷனர் கிருஷ்ணகாந்த் பட்டேல் உத்தரவின் பேரில், நிடமானூர் அருகே போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த ஒரு லாரியை நிறுத்திச் சோதனை செய்தபோது, அதற்குள் பாக்கெட்டுகளில் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த லாரி டிரைவரிடம் நடத்திய விசாரணையில், பின்னால் வந்த மற்றொரு லாரியிலும் கஞ்சா இருப்பது தெரியவரவே, அதையும் போலீசார் மடக்கிப் பிடித்தனர். இந்த 2 லாரிகளிலும் சேர்த்து மொத்தம் 140 கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதன் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் ரூ.70 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட லாரி டிரைவர்கள் தமிழ்நாட்டின் தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியைச் சேர்ந்த செல்வம் மற்றும் பட்டுகோட்டம்பட்டியைச் சேர்ந்த டி.பிரதீப் என்பது விசாரணையில் தெரியவந்தது. கஞ்சாவை குறிப்பிட்ட இடத்திற்கு கொண்டு சேர்த்தால் தலா ரூ.30 ஆயிரம் கூலி தருவதாகக் கூறியதால் இந்தக் கடத்தலுக்கு ஒப்புக்கொண்டதாக அவர்கள் கூறினர். இவர்களுடன் சேர்த்து இந்த கடத்தலின் பின்னணியில் இருந்த ஒடிசாவைச் சேர்ந்த அரூப் சிங், ராஜேஷ்குமார் சிங் மற்றும் கேரளாவைச் சேர்ந்த முகமது சொஹைல் ஆகியோரையும் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.