காஸ் சிலிண்டர் வெடித்து 2 பச்சிளம் குழந்தைகள் பரிதாபப் பலி... பெரும் சோகம்!
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே நாவலூரில் இன்று அதிகாலை நிகழ்ந்த சிலிண்டர் வெடிப்பு விபத்தில், வீடு இடிந்து விழுந்து இரண்டு சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் மேலும் 7 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.நாவலூர் சாமுண்டீஸ்வரி நகர் 2-வது தெருவில் சங்கர் என்பவருக்குச் சொந்தமான காம்பவுண்டில் 3 வாடகை வீடுகள் உள்ளன. இதில் சஞ்சீவ்குமார்-சோனியா தம்பதியினர் தங்களது குழந்தைகளுடன் வசித்து வந்தனர்.
இன்று காலை சோனியா டீ போடுவதற்காகக் கேஸ் அடுப்பை பற்ற வைத்துள்ளார்.ஏற்கனவே சிலிண்டரில் காஸ் கசிவு ஏற்பட்டிருந்ததால், தீப்பொறி பட்டவுடன் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது.சிலிண்டர் வெடித்த அதிர்வில் அந்த வரிசையில் இருந்த மூன்று வாடகை வீடுகளும் சுக்குநூறாக உடைந்து சரிந்தன. இடிபாடுகளுக்குள் சிக்கி சஞ்சீவ்குமாரின் 4 வயது மகள் கிருத்திகா மற்றும் ஒன்றரை வயது மகன் தீரன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர்.இந்த அதிர்வில் அருகில் இருந்த வேலன், பாஸ்கர் ஆகியோரது வீடுகளும் பலத்த சேதமடைந்தன.
சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்தனர். சிறுசேரி தீயணைப்பு நிலையத்தினர் விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கிக் கிடந்தவர்களை மீட்டனர்.படுகாயமடைந்த சஞ்சீவ்குமார், சோனியா, ஆடிட்டர் முருகன் மற்றும் பக்கத்து வீட்டில் வசித்த வைரமுத்து குடும்பத்தினர் என மொத்தம் 7 பேர் மீட்கப்பட்டனர்.அவர்கள் அனைவரும் உடனடியாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சம்பவ இடத்திற்குத் தாழம்பூர் காவல் ஆய்வாளர் டில்லிபாபு தலைமையிலான போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், காஸ் கசிவுதான் விபத்திற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. இரண்டு பிஞ்சுக் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.