அமோனியா வாயு கசிவு விபத்தில் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு!
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த கன்னிகைப் பேர் கிராமத்தில் புனித பீட்டர் பால் கடல் உணவு பொருள்களை பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் தனியார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்தத் தொழிற்சாலையில் கடந்த 21ம் தேதி குளிரூட்டும் குழாய் அமைப்பில் ஏற்பட்ட குறைபாட்டின் காரணமாகப் பயங்கரமான அமோனியா வாயு கசிவு விபத்து ஏற்பட்டது. இந்த நச்சு வாயுவைச் சுவாசித்த அங்கிருந்த வடமாநில பெண் தொழிலாளர்கள் உட்பட 77 தொழிலாளர்கள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர்.
பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவ வாகனங்கள் மூலம் அருகில் உள்ள தனியார் மற்றும் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அவசரமாக அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்தில் ஏற்கனவே ஒடிசா மற்றும் அசாம் மாநிலங்களைச் சேர்ந்த பெண் தொழிலாளர்கள் மற்றும் 15 வயது சிறுமிகள் 2 பேர் உட்பட மொத்தம் 10 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த நிலையில் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுத் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த மற்றொரு பெண் தொழிலாளியும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதன் காரணமாக இந்த நச்சு வாயு கசிவு விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்து தொடர்பாகத் தொழிற்சாலையின் உரிமையாளர்களான சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த மோகன் 59, ஜோசப் ஜெகன் 48 மற்றும் மேலாளர் டேனியல் 68 ஆகிய 3 பேரை காவல் துறையினர் ஏற்கனவே கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். வடமாநிலத் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ள இந்த விபத்து குறித்து மாவட்ட ஆட்சியர் கவிதா தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.