பித்ரு தோஷம் நீக்கும் காயத்ரி மந்திரம்.. இன்று உச்சரிக்க மறக்காதீங்க!

 

இன்று பங்குனி அமாவாசை என்பதால் பித்ருக்களின் ஆசி பெறவும், பித்ரு தோஷங்கள் நீங்கவும் சொல்ல வேண்டிய மிக எளிய, சக்திவாய்ந்த ஸ்லோகங்களை மறக்காதீங்க. 

"ஓம் பித்ரு கணாய வித்மஹே ஜகத் தாரிணாய தீமஹி தந்நோ பித்ரு ப்ரசோதயாத்" எனும் பித்ரு காயத்ரி மந்திரத்தை இன்று 21 அல்லது 108 முறை சொல்வது பித்ருக்களின் ஆத்மாவை சாந்தியடையச் செய்யும்.

பொருள்: பித்ருக்களின் கூட்டத்தை நான் அறிகிறேன். உலகைத் தாங்குபவர்களைத் தியானிக்கிறேன். அந்தப் பித்ருக்கள் நம் அறிவைத் தூண்டி வழிநடத்தட்டும்.

பித்ரு ஸ்தோத்திரம்: 

முன்னோர்களை நினைத்து மனதாரச் சொல்ல வேண்டிய பித்ரு ஸ்தோத்திரம், "தேவதாப்ய: பித்ருப்யஸ்ச மஹாயோகிப்ய ஏவச | நம: ஸ்வதாயை ஸ்வாஹாயை நித்யமேவ நமோ நம: ||"

பொருள்: தேவர்களுக்கும், பித்ருக்களுக்கும், மகா யோகிகளுக்கும் வணக்கம். ஸ்வதா தேவிக்கும் ஸ்வாஹா தேவிக்கும் எந்நாளும் எனது வணக்கங்கள் உரித்தாகட்டும்.

மந்திரம் தெரியாதவர்கள் அது குறித்தெல்லாம் கவலைப்பட தேவையில்லை. உங்களுக்குச் சமஸ்கிருத ஸ்லோகங்கள் கடினமாக இருந்தால், உங்கள் குலதெய்வத்தை நினைத்து எளிமையாக தமிழில், "எம் குல முன்னோர்களே, தெரியாமல் செய்த பிழைகளைப் பொறுத்து, எங்களையும் எங்கள் சந்ததியினரையும் ஆசீர்வதித்து வழிநடத்துங்கள். பித்ருக்களே நமஸ்காரம்" என்று சொல்லி வழிபடலாம்.

இன்று பசு மாட்டிற்கு அகத்திக் கீரை அல்லது பழங்கள் வழங்குவது பித்ருக்களின் பசியைத் தீர்க்கும் என்பது நம்பிக்கை. மாலையில் வீட்டின் தென்மேற்கு மூலையில் (பித்ருக்களுக்கு உரிய திசை) ஒரு நெய் தீபம் ஏற்றி அவர்களை வணங்கவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து, அதில் சிறிதளவு கருப்பு எள் கலந்து, சூரியனைப் பார்த்தவாறு அல்லது கிழக்கு நோக்கி நின்று "பித்ருக்களே திருப்தி அடையுங்கள்" என மூன்று முறை தரையில் விடவும். இவையெல்லாம் பித்ருக்களை சாந்தியடைய செய்யும் எளிமையான பரிகாரங்கள். 

இன்று மார்ச் 18ம தேதி மாலை 5:30 மணி வரை அமாவாசை திதி உள்ளது. அதற்குள் இந்த வழிபாடுகளைச் செய்வது மிகுந்த பலனைத் தரும்.