ஜெம் வீரமணி வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு! 4 ஐபிஎஸ் அதிகாரிகள் விசாரணை!
ஜெம் கிரானைட்ஸ் நிறுவன உரிமையாளர் ஆர். வீரமணி மீதான போக்சோ வழக்கில் விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த வழக்கை விசாரிக்க 4 ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக வீரமணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் தொடர்புடையதாக கூறப்படும் சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்ஹன் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கு தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், வழக்கின் முந்தைய விசாரணை மற்றும் அதில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் ஐஜி தேன்மொழி தலைமையில் இந்த சிறப்பு குழு செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மேற்கு சட்டம்-ஒழுங்கு இணை ஆணையர் திஷா மிட்டல், டிஜிபி அந்தஸ்திலான அதிகாரி முத்தரசி மற்றும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றப்பிரிவு துணை ஆணையர் கீதாஞ்சலி ஆகியோரும் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
இதனிடையே, வீரமணி வழக்கை ஏற்கனவே விசாரித்த போலீஸ் அதிகாரிகளிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. வழக்கை முடிப்பதற்காக போலீசார் முன்பு தாக்கல் செய்த முடிப்பு அறிக்கையை போக்சோ சிறப்பு நீதிமன்றம் ஏற்க மறுத்து, மீண்டும் விசாரணை நடத்த உத்தரவிட்டிருந்தது.
இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தியதாக கூறப்படும் உதவி ஆணையர் யாஸ்மினுக்கு சம்மன் அனுப்பப்பட்டதுடன், அவர் காத்திருப்போர் பட்டியலுக்கும் மாற்றப்பட்டுள்ளார். மேலும் சில போலீஸ் அதிகாரிகளிடமும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வழக்கு தொடர்பாக பணப் பரிவர்த்தனைகள் மற்றும் முன்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ஏதேனும் முறைகேடு அல்லது தலையீடு இருந்ததா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவை அனைத்தும் தற்போது விசாரணையில் உள்ள குற்றச்சாட்டுகள் என்பதால், சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதாக கருத முடியாது.சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், ஜெம் வீரமணி வழக்கின் அடுத்தகட்ட விசாரணை மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.