ஜெம் வீரமணி சிறுமி பாலியல் வழக்கில் ரத்தீஷ் ராஜுக்குத் தொடர்பு - SRMU கண்ணையா மகன் பிரகாசுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

 

ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணிக்கு எதிரான போக்சோ வழக்கு விவகாரத்தில், சர்ச்சைக்குரிய தொழிலதிபரான ரத்தீஷ் ராஜ் மூலம் பல கோடி ரூபாய் பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாகவும், வழக்கில் தொடர்புடைய பிரகாசுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில் தனது பெயர் எஃப்.ஐ.ஆரில் சிக்காமல் இருக்க, ஜெம் வீரமணி காவல் துறை உயரதிகாரிகள் மற்றும் முக்கிய அரசியல் கட்சியினருக்குப் பல கோடி ரூபாய் செட்டில் செய்ததாகக் கூறப்படும் விவகாரத்தில், தொழிலதிபர் ரத்தீஷ் ராஜ் பெயரும் அடிபட்டுள்ளது.

டாஸ்மாக் முறைகேடு மற்றும் பல்வேறு அரசியல் விவகாரங்களில் சர்ச்சைகளில் சிக்கிய ரத்தீஷ் ராஜ் மூலம் ரூ.70 கோடி வரை பணப்பரிமாற்றம் நடைபெற்றதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வழக்கில் தொடர்புடையவரும், எஸ்.ஆர்.எம்.யு. தலைவர் கண்ணையாவின் மகனுமான பிரகாஷ், ரத்தீஷ் ராஜுடன் தொடர்பில் இருந்ததாகவும், போலீசாரின் கைது நடவடிக்கைக்குப் பயந்து தற்போது வெளிநாட்டில் தலைமறைவாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

பிரகாஷுக்கு எதிராகப் பாலியல் தொழில் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் சம்மன் அனுப்பியிருந்த நிலையில், அவர் வெளிநாட்டில் இருப்பதால், இந்தியாவில் உள்ள எந்தவொரு விமான நிலையத்திற்கு வந்தாலும் உடனடியாகக் கைது செய்யும் வகையில் அவருக்கு எதிராக அதிகாரப்பூர்வமாக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.