உடல் முழுவதும் 70 சதவீதம் டாட்டூ... உலக சாதனை படைத்த இரட்டை சகோதரிகள்!

 

 

உடலில் சுமார் 70 சதவீதம் டாட்டூ எனப்படும் பச்சைக்குத்துகளைப் பதித்து, உலகின் அதிக டாட்டூ கொண்ட பெண் இரட்டையர்கள் என்ற கின்னஸ் உலக சாதனையை ஜெர்மனியைச் சேர்ந்த சகோதரிகள் படைத்துள்ளனர்.

ஜெர்மனியின் ஸ்டட்கார்ட் நகருக்கு அருகிலுள்ள சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அலைன் காலியானோ, அலீனா ஹான்லே. இரட்டையர்களான இவர்கள் சிறுவயதில் தங்களது தாயாரிடம் தலா ஒரு டாட்டூ மட்டுமே போட்டுக்கொள்வதாக வாக்குறுதி அளித்திருந்தனர்.

ஆனால், முதல் டாட்டூ போட்டுக்கொண்ட பிறகு இந்தக் கலையின் மீது இருவருக்கும் ஆர்வம் அதிகரித்தது. இதனால் தொடர்ந்து விதவிதமான வண்ணங்களில் டாட்டூக்களைப் போட்டுக்கொள்ளத் தொடங்கினர். ஆரம்பத்தில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவர்களது தாயார், பின்னர் மகள்களின் ஆர்வத்துக்கு ஆதரவளிக்கத் தொடங்கினார்.

70 சதவீத உடலில் டாட்டூ

தற்போது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசித்து வரும் இருவரும், 'பெட்டூனியா ட்வின்ஸ்இங்க்' என்ற பெயரில் சொந்தமாக டாட்டூ ஸ்டுடியோ நடத்தி வருகின்றனர். இவர்களுடன் மேலும் 8 பெண் டாட்டூ கலைஞர்களும் பணியாற்றி வருகின்றனர்.

கடந்த 2025-ம் ஆண்டு அக்டோபர் மாதம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற கின்னஸ் சாதனைக்கான அளவீட்டில், இருவரது உடலிலும் சராசரியாக 70 சதவீதம் டாட்டூக்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, 'அதிக டாட்டூ கொண்ட பெண் இரட்டையர்கள்' என்ற உலக சாதனையை இருவரும் பெற்றனர். இவர்களது சாதனை கின்னஸ் உலக சாதனைகள் 2027 புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது.

தொடரும் டாட்டூ ஆர்வம்

சாதனை படைத்த பிறகும் இருவரும் டாட்டூ போட்டுக்கொள்வதை நிறுத்தவில்லை. மாதம் ஒருமுறையாவது ஒருவருக்கொருவர் புதிய டாட்டூக்களைப் போட்டுக்கொள்கின்றனர். இதனால் அவர்களது உடலில் டாட்டூக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அலைனுக்கு நெற்றியில் உள்ள மண்டலா வடிவ டாட்டூ மிகவும் பிடித்தமானதாகும். அதேபோல், சிறுவயதில் இருவரும் வீடியோ கேம் விளையாடிய நினைவாக அவரது காலில் நிண்டெண்டோ விளையாட்டுக் கருவியின் வடிவம் பச்சைக்குத்தப்பட்டுள்ளது.

அலீனாவுக்கு கன்னத்தில் உள்ள வெள்ளை நிற மண்டலா டாட்டூவும், வயிற்றுப் பகுதியில் 7 மணி நேரம் செலவிட்டு வரையப்பட்ட டாட்டூவும் பிடித்தமானவை. மேலும், 10 ஆண்டுகள் அவர் வாசித்த இசைக்கருவியான பிரெஞ்சு ஹார்னின் வடிவமும் அவரது காலில் இடம்பெற்றுள்ளது.

ஒரே மாதிரியான தோற்றம் கொண்டிருந்தாலும், தங்களது டாட்டூ வடிவமைப்புகளில் தனித்துவத்தைப் பின்பற்றுவதாக இருவரும் தெரிவித்துள்ளனர்.