செஞ்சி சிறுமி மாயமான வழக்கு: செங்கல் சூளையில் சிபிசிஐடி விசாரணை தீவிரம்!

 

 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே 7 வயது சிறுமி மாயமான வழக்கில், சிபிசிஐடி போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த சிறுமி, கடந்த அக்டோபர் 12-ம் தேதி அதிகாலையில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது காணாமல் போனார். அவரைத் தேடும் பணியில் பல்வேறு குழுக்கள் ஈடுபட்டும் இதுவரை சிறுமி கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்த வழக்கில் தொழில்நுட்ப ஆதாரங்களைச் சேகரிக்கும் பணியிலும் போலீசார் கவனம் செலுத்தி வருகின்றனர். சிறுமி மாயமான நாளன்று ஆலம்பூண்டி பகுதியில் செயல்பாட்டில் இருந்த 3 செல்போன் கோபுரங்களில் பதிவான அழைப்பு விவரங்கள் மற்றும் செல்போன் பயன்பாட்டுத் தகவல்களை ஆய்வு செய்து வருகின்றனர். கிராமத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளும் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையே, சிறுமியின் வீட்டைச் சுற்றியுள்ள வயல்வெளிப் பகுதிகளில் சோதனை நடத்திய போலீசார், அருகிலுள்ள செங்கல் சூளைக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அங்கு பணிபுரியும் தொழிலாளர்களிடம் விசாரணை நடத்தினர். சந்தேகத்தின் அடிப்படையில் சில வடமாநில இளைஞர்களையும் பிடித்து விசாரித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சிறுமியின் குடும்பத்தினரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதுவரை உறுதியான துப்பு கிடைக்காத நிலையில், சிறுமியை கண்டுபிடிக்க சிபிசிஐடி போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையைத் தொடர்ந்து வருகின்றனர்.