கிச்சன் கேஸ் சிலிண்டருக்குள் பதுங்கியிருந்த பாம்பு கடித்து இளம்பெண் உயிரிழப்பு - கேரளாவில் சோகம்!

 

கேரள மாநிலம் கொல்லம் அருகே சமையலறையில் கேஸ் சிலிண்டருக்குப் பின்னால் பதுங்கியிருந்த விஷப்பாம்பு தீண்டியதில், பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொல்லம் கடக்கால் சாரிபரம்பை பகுதியைச் சேர்ந்தவர் அனீஷ். இவரது மனைவி ஷாலினி (37). அனீஷ் வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில், ஷாலினி தனது வீட்டில் வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று ஷாலினி தனது வீட்டின் சமையலறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது, அங்குள்ள கேஸ் சிலிண்டரில் பதுங்கியிருந்த விஷப்பாம்பு அவரை எதிர்பாராதவிதமாகத் தீண்டியது.

பாம்பு கடித்தவுடன் அஞ்சல் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பிய அவருக்கு, சிறிது நேரத்தில் உடல்நிலை மீண்டும் மோசமானது. இதனையடுத்து அவர் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்குச் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

பாம்பு கடித்த பிறகு மருத்துவமனையில் முழுமையான சிகிச்சை பெறாமல் பாதியிலேயே வீடு திரும்பியதே ஷாலினியின் உயிரிழப்புக்குக் காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது. இச்சம்பவம் குறித்துக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.