காதலனுடன் ஓடிப்போன இளம்பெண் சடலமாக மீட்பு - காதலனே கழுத்தை நெரித்துக் கொன்றது அம்பலம்!
உத்தரப்பிரதேச மாநிலத்தில் காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறிய திருமணமான இளம்பெண், கால்வாயில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோஹா பகுதியைச் சேர்ந்தவர் ஷாசியா (18). திருமணமான இவர், சர்ஃபராஸ் என்பவரைக் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், தனது வீட்டில் இருந்த ரூ.1 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் தங்க நகைகளுடன் ஷாசியா வீட்டை விட்டு வெளியேறி, காதலன் சர்ஃபராஸுடன் ஓடிப்போனதாகக் கூறப்படுகிறது.
இருவரும் திருமணம் செய்துகொள்ளத் திட்டமிட்டிருந்த சூழலில், ஷாசியா திடீரென மாயமானார். இதனிடையே அப்பகுதியில் உள்ள ஒரு கால்வாயில் பெண் ஒருவரின் சடலம் மிதப்பதாகக் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்குச் சென்று உடலைக் கைப்பற்றிய போலீசார் நடத்திய விசாரணையில், அது மாயமான ஷாசியா என்பது கண்டறியப்பட்டது.
ஷாசியாவின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். அதன் அறிக்கையில், ஷாசியாவைக் காதலன் சர்ஃபராஸே கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்தது உறுதியானது.
பணம் மற்றும் நகைகளைப் பறித்துக் கொண்டு இக்கொலையைச் செய்தாரா என்ற கோணத்தில் சர்ஃபராஸ் மீது வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், தலைமறைவாக உள்ள அவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.