கோவையில் நிர்வாண நிலையில் இளம்பெண் சடலமாக மீட்பு!

 

கோவை மேற்கு புறவழிச்சாலை அருகே உள்ள காட்டுப் பகுதியில், அடையாளம் தெரியாத இளம்பெண் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கோவை மேற்கு புறவழிச்சாலை பகுதியை ஒட்டியுள்ள காட்டுப் பகுதியில் இருந்து இன்று துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள், அது குறித்துக் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குனியமுத்தூர் காவல்துறையினர், அங்குள்ள புதர்மறைவில் சுமார் 25 முதல் 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவரின் சடலம் ஆடைகளின்றி, அழுகிய நிலையில் கிடந்ததைக் கண்டறிந்து மீட்டனர்.

மீட்கப்பட்ட பெண்ணின் உடல் பல நாட்கள் ஆனதால் மிகவும் அழுகியும், முகம் அடையாளம் காண முடியாதபடி சிதைந்த நிலையிலும் இருந்துள்ளது. இதனால் அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரங்கள் உடனடியாகத் தெரியவில்லை.

காவல்துறையினர் அந்தப் பெண்ணின் உடலைக் கைப்பற்றி, கோவை அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே, அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது மரணத்திற்கு வேறு ஏதேனும் காரணமா என்பது தெரியவரும்.

இச்சம்பவம் குறித்துக் குனியமுத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். கோயம்புத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் அண்மைக் காலங்களில் காணாமல் போன பெண்களின் புகார்கள் மற்றும் அவர்களின் புகைப்படங்களை வைத்துப் போலீசார் தீவிரமாக முதற்கட்ட விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

குற்றச் சம்பவங்கள் அல்லது வன்முறைகள் தொடர்பான தகவல்கள் ஏதேனும் தெரிந்தால், உடனடியாகக் காவல்துறையின் அவசர உதவி எண்ணான 100 அல்லது பெண்கள் உதவி எண்ணான 1091 ஆகியவற்றைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கவும்.