ஸ்பாவில் சிறுமி மீட்கப்பட்ட வழக்கில் திருப்பம் - கூடுவாஞ்சேரி ஸ்பாவிலும் பாலியல் வன்கொடுமை!
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள கோவளம் ஸ்பாவில் சிறுமி ஒருவர் மீட்கப்பட்ட வழக்கின் தொடர் விசாரணையில், சென்னை கூடுவாஞ்சேரி பகுதியில் இயங்கி வந்த ஸ்பாவிலும் அந்தச் சிறுமி பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்தப்பட்டது தெரியவந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவளத்தில் உள்ள ஒரு ஸ்பாவில் சட்டவிரோதமாகப் பாலியல் தொழில் நடைபெறுவதாகக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் போலீசார் சோதனை நடத்தி, அங்கிருந்த சிறுமியை அண்மையில் மீட்டனர்.
பாதிக்கப்பட்ட சிறுமியிடம் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில், கோவளத்திற்கு அழைத்து வரப்படுவதற்கு முன்பாகச் சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரி பகுதியில் இயங்கி வந்த ஒரு ஸ்பாவிலும் அவர் கட்டாயப்படுத்திப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டது தெரியவந்தது.
இந்த புதிய திருப்பத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சிறுமியிடம் கூடுதல் வாக்குமூலம் பெறுவதற்காகத் தமிழ்நாடு காவல்துறையின் சிறப்புத் தனிப்படை கேரளா சென்றுள்ளது.
கேரளாவில் சிறுமியிடம் முறைப்படி வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு விசாரணையை முடித்துத் திரும்பியவுடன், சம்பந்தப்பட்ட சென்னை கூடுவாஞ்சேரி ஸ்பாவின் உரிமையாளர்கள் மற்றும் இதில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது போக்சோ உள்ளிட்ட கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.