99 தமிழ் மலர்களை 31 வினாடிகளில் ஒப்புவித்து 3ம் வகுப்பு மாணவி சாதனை!
திருநெல்வேலியைச் சேர்ந்த மூன்றாம் வகுப்பு மாணவி தௌலத் இஸ்ரா, சங்ககாலத் தமிழ் இலக்கியமான குறிஞ்சிப்பாட்டில் இடம்பெற்றுள்ள 99 தமிழ் மலர்களின் பெயர்களை வெறும் 31 வினாடிகளில் அதிவேகமாகவும் பிழையின்றியும் மனப்பாடமாக ஒப்புவித்து புதிய உலக சாதனை படைத்துள்ளார். இவருடைய இந்த அசாத்தியமான நினைவாற்றல் சாதனை அமெரிக்கா உலக சாதனைப் புத்தகத்தில் முறைப்படி பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சிறுவயதிலேயே தௌலத் இஸ்ரா கல்வி மற்றும் விளையாட்டு எனப் பல்வேறு துறைகளில் தொடர்ந்து சாதனைகளைப் புரிந்து வருகிறார். குறிப்பாக ரூபிக்ஸ் கியூப்பை அதிவேகமாகத் தீர்ப்பது, கணிதம் மற்றும் அறிவியலில் சிறந்து விளங்குவதுடன், தமிழர்களின் பாரம்பரிய கலைகளான வில்வித்தை மற்றும் சிலம்பத்திலும் தேர்ச்சி பெற்றுள்ளார். இதன் மூலம் இவர் இதுவரை 8 உலக சாதனைகளையும், 15 கௌரவ விருதுகளையும் பெற்றுள்ளார்.
மாணவியின் தமிழ் மொழிப் பற்றையும், இந்த அசாத்திய உலக சாதனையையும் பாராட்டும் வகையில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரசண்ணகுமார், மாணவி தௌலத் இஸ்ராவை நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார். அவருடைய உலக சாதனை சான்றிதழைப் பார்வையிட்ட அவர், எதிர்காலத்திலும் இது போன்ற பல சாதனைகளைப் புரிந்து மாவட்டத்திற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என ஊக்கமளித்தார்.