undefined

பெண்களேஎ உஷார்... ரூ.2.58 கோடி அபேஸ்...சிபிஐ முன்னாள் ஐ.ஜி மனைவியிம் கைவரிசை! 

 

ஆந்திராவின் "சிங்கம்" என்று அழைக்கப்படும் சிபிஐ முன்னாள் இணை இயக்குனர் லட்சுமிநாராயணாவின் மனைவியே, ஆன்லைன் மோசடி கும்பலிடம் சிக்கி பல கோடி ரூபாயை இழந்திருக்கும் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. படித்தவர்கள், விழிப்புணர்வு உள்ளவர்கள் என யாரையும் இந்த சைபர் கொள்ளையர்கள் விட்டுவைப்பதில்லை என்பதற்கு இந்தச் சம்பவமே சாட்சி.

சிபிஐ முன்னாள் இணை இயக்குனர் லட்சுமிநாராயணாவின் மனைவி ஊர்மிளா. இவரது வாட்ஸ்அப் எண்ணுக்கு மர்ம நபர்களிடம் இருந்து ஒரு லிங்க் வந்துள்ளது. அதில், "பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு 500 சதவீதம் லாபம் கிடைக்கும்" எனப் கவர்ச்சிகரமான விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இதனை உண்மை என்று நம்பிய ஊர்மிளா, அந்த மோசடி கும்பலின் வலையில் விழுந்துள்ளார்.

தொடக்கத்தில் சிறிய தொகையை முதலீடு செய்தவருக்கு, கைமேல் லாபம் வருவது போல போலியான கணக்குகளைக் காட்டி அந்த கும்பல் ஆசையைத் தூண்டியுள்ளது. இதனை நம்பி ஊர்மிளா 19 தவணைகளில் மொத்தம் ரூ.2.58 கோடியை அந்த மர்ம நபர்களின் வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார். இந்த பெரும் தொகையைத் திரட்ட அவர் தன்னிடம் இருந்த நகைகள் மற்றும் தனது கணவர் லட்சுமிநாராயணாவின் தங்க நகைகளை அடமானம் வைத்துள்ளார். அதுமட்டுமின்றி, தெரிந்தவர்களிடம் கைமாற்றாக கடன் வாங்கியும் அந்தப் பணத்தை முதலீடு செய்துள்ளார்.

முதலீடு செய்த பணத்திற்கான லாபம் வராததால் சந்தேகமடைந்த ஊர்மிளா, அந்த லிங்க் மூலம் தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் மர்ம நபர்கள் முறையான பதில் அளிக்காமல் இழுத்தடித்துள்ளனர். ஒரு கட்டத்தில் அவர்களின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஊர்மிளா நிலைகுலைந்து போனார். இதுகுறித்து அவர் உடனடியாக ஐதராபாத் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், மோசடி கும்பலின் வங்கி கணக்குகளை ஆய்வு செய்து அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட ஊர்மிளாவின் கணவர் லட்சுமிநாராயணா சாதாரணமானவர் அல்ல. ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீதான வருமானத்திற்கு அதிகமான சொத்து குவிப்பு வழக்கை முன்னின்று விசாரித்தவர். இவரது அதிரடி விசாரணை அறிக்கையின் அடிப்படையில் தான் ஜெகன்மோகன் ரெட்டி 16 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அத்தகைய அதிகாரமிக்க ஒருவரின் குடும்பத்திற்கே இந்த நிலைமை என்றால், சாதாரண மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறிதான் என சமூக வலைதளங்களில் விவாதங்கள் கிளம்பியுள்ளன.