மின்சார உற்பத்தியில் உலகளாவிய புரட்சி - விண்வெளி சூரிய மின்நிலைய வயர்லெஸ் சோதனையில் சீனா வரலாற்றுச் சாதனை!
விண்வெளியில் பிரம்மாண்ட சூரிய மின்நிலையம் அமைத்து, அங்கிருந்து எவ்வித கம்பிகளும் இன்றி வயர்லெஸ் முறையில் பூமிக்கு மின்சாரத்தைக் கடத்தும் அதிநவீன தொழில்நுட்பத்தின் முதற்கட்ட தரைத்தள சோதனையைச் சீன விஞ்ஞானிகள் முழுமையான வெற்றிகரமாக முடித்து உலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளனர்.
விண்வெளியில் சூரிய ஒளித்தகடுகள் (சோலார் பேனல்கள்) மூலம் உறிஞ்சப்படும் சூரிய ஆற்றலை, உயர் அதிர்வெண் கொண்ட மைக்ரோவேவ் அலைகளாக மாற்றுவதில் விஞ்ஞானிகள் வெற்றி பெற்றுள்ளனர். இவ்வாறு மாற்றப்பட்ட மைக்ரோவேவ் ஆற்றலை, காற்றில் எவ்வித மின்சாரக் கம்பிகளும் இன்றி 100 மீட்டர் தூரத்திற்கு ஒளியின் வேகத்தில் வயர்லெஸ் தொழில்நுட்பத்தில் பாய்ச்சி, தரைத்தளத்தில் உள்ள ரிசீவர் ஆண்டெனாக்கள் மூலம் மீண்டும் தூய்மையான மின்சாரமாக மாற்றிச் சாதனை படைத்துள்ளனர்.
பூமியில் அமைக்கப்படும் சூரிய மின்நிலையங்கள் இரவு நேரங்களிலும், மேகமூட்டமான காலங்களிலும் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாது. ஆனால், விண்வெளியில் இந்த தடைகள் எதுவும் இல்லை.
விண்வெளியில் பூமியின் புவிவட்டப் பாதையில் 36,000 கிலோமீட்டர் உயரத்தில் பிரம்மாண்ட சூரிய மின் உற்பத்தி செயற்கைக்கோள்களை நிறுவுவதே சீனாவின் இறுதி இலக்காகும். இதன் மூலம் புவி ஈர்ப்பு மற்றும் காலநிலைக் கட்டுப்பாடுகள் இன்றி, வருடத்தில் 365 நாள்களும், 24 மணி நேரமும் தடையற்ற தூய்மையான பசுமை மின்சாரத்தை பூமிக்கு அனுப்ப முடியும்.
சீன விண்வெளி தொழில்நுட்பக் கழகத்தின் அதிகாரப்பூர்வ கால அட்டவணையின்படி, இந்தத் திட்டத்தின் அடுத்தகட்ட நகர்வுகள் வேகத்தில் திட்டமிடப்பட்டுள்ளன. வரும் 2028-ஆம் ஆண்டிற்குள், இந்த தொழில்நுட்பத்தின் சிறிய அளவிலான சோதனைச் செயற்கைக்கோள் விண்வெளிக்கு ஏவப்பட்டு, விண்வெளியில் இருந்து நேரடியாகப் பூமிக்கு மின்சாரம் கடத்தும் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
வரும் 2035-ஆம் ஆண்டிற்குள் 10 மெகாவாட் திறனிலும், 2050-ஆம் ஆண்டிற்குள் 1 கிகாவாட் திறனிலும் வணிகரீதியான விண்வெளி சூரிய மின் நிலையங்களைச் சீனா முழுமையாகச் செயல்பாட்டிற்குக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது.
அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய விண்வெளி முகமைகள் இதே போன்ற ஆய்வுகளில் ஈடுபட்டு வரும் வேளையில், சீனா தரைத்தள சோதனையை முதலில் வெற்றிகரமாக முடித்து விண்வெளி மின்சாரப் புரட்சியில் உலக நாடுகளை விடப் பல படிகள் முன்னிலைக்குச் சென்றுள்ளது சர்வதேச அறிவியல் அரங்கில் பெரும் உற்றுநோக்கலாக மாறியுள்ளது.