நெஞ்சை உலுக்கும் கொடூரம்... ஆடு சரியாக மேய்க்கவில்லை என 14 வயது சிறுவன் அடித்துக் கொலை!
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த பொதட்டூர்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் விநாயகம். இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவன், ஆடு மேய்க்கும் தொழிலாளியாகக் கடந்த சில மாதங்களாக வேலை பார்த்து வந்துள்ளான். இந்த நிலையில், நேற்று முன்தினம் வழக்கம் போல் ஆடுகளை மேய்ச்சலுக்குக் கூட்டிச் சென்ற அந்தச் சிறுவன், மாலையில் ஆடுகளுடன் வீடு திரும்பியுள்ளான்.
அப்போது ஆடுகள் சில சரியாக மேயாமல் பசியோடு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஆட்டு மந்தை முதலாளி விநாயகம், "ஏன்டா ஆடுகளை ஒழுங்காக மேய்க்கவில்லை?" என்று கேட்டு அந்தச் சிறுவனை சரமாரியாகக் திட்டியுள்ளார். அதோடு கோபம் அடங்காத அவர், கட்டையால் அச்சிறுவனை மிருகத்தனமாக அடித்துத் துவைத்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த அந்த 14 வயது சிறுவன், வலியால் துடிதுடித்துச் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். சிறுவன் இறந்துவிட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்த விநாயகம், போலீசுக்குத் தெரிந்தால் மாட்டிக் கொள்வோம் என்ற பயத்தில், நள்ளிரவோடு நள்ளிரவாகச் சிறுவனின் உடலை ரகசியமாக எடுத்துச் சென்று அங்குள்ள சுடுகாட்டில் யாருக்கும் தெரியாமல் புதைத்துவிட்டுத் தப்பியோடிவிட்டார்.
மறுநாள் காலையில் சிறுவனைக் காணாததால் அதிர்ச்சியடைந்த அவனது பெற்றோர் மற்றும் உறவினர்கள், பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் பொதட்டூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் நடத்திய அதிரடி விசாரணையில், விநாயகம் சிறுவனை அடித்துக் கொன்று சுடுகாட்டில் புதைத்த கொடூர உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. இதனைத் தொடர்ந்து, இன்று வட்டாட்சியர் முன்னிலையில் சுடுகாட்டில் புதைக்கப்பட்ட சிறுவனின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.