ஒரே நேரத்தில் 4 குட்டிகளை ஈன்ற அதிசய ஆடு...  !

 

கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் பகுதியில் விவசாயி ஒருவருக்குச் சொந்தமான செம்மறி ஆடு ஒன்று ஒரே நேரத்தில் 4 குட்டிகளை ஈன்றெடுத்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த தகவல்களும், புகைப்படங்களும் தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி வருகின்றன.

 

பெங்களூரு புறநகர்ப் பகுதியிலுள்ள பனவதி கிராமத்தில் வசித்து வருபவர்  கோபாலகிருஷ்ணன். விவசாயியான இவர், தனது சொந்த ஊரில் ஆடு மற்றும் இதர கால்நடைகளை வளர்த்து வருகிறார். இவருக்குச் சொந்தமான ஒரு செம்மறி ஆடு சினையாக இருந்த நிலையில், அது நேற்று குட்டிகளை ஈன்றது.வழக்கமாக ஆடுகள் பிரசவிக்கும்போது ஒரே நேரத்தில் ஒன்று அல்லது அதிகபட்சமாக இரண்டு குட்டிகளை மட்டுமே ஈன்றெடுப்பது வழக்கம். ஆனால், இச்சம்பவத்தில் அந்த ஆடு எந்தவித சிக்கலுமின்றி ஒரே நேரத்தில் நான்கு குட்டிகளைப் பெற்றெடுத்துள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

 

ஒரே பிரசவத்தில் பிறந்த இந்த நான்கு குட்டிகளில் 2 குட்டிகள் ஆண் இனத்தைச் சேர்ந்தவை என்றும், மற்ற 2 குட்டிகள் பெண் இனத்தைச் சேர்ந்தவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய் ஆடும், பிறந்த நான்கு குட்டிகளும் எவ்வித உடல்நலப் பாதிப்புமின்றி மிக ஆரோக்கியமாக இருப்பதாக உரிமையாளர் கோபாலகிருஷ்ணன் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.