பசிபில் பெருங்கடலுக்கு அடியில் 'தங்க தொழிற்சாலை'... எரிமலைகளுக்கு நடுவே தங்கம் உருவாவதைக் கண்டுபிடித்த விஞ்ஞானிகள்!

 

பூமியின் ஆழத்தில் தங்கம் எப்படி உருவாகிறது என்பது குறித்த பல காலத்து மர்மத்திற்கு, பசிபிக் பெருங்கடலின் ஆழத்தில் விடை கிடைத்துள்ளது. தென் பசிபிக் பெருங்கடலில் உள்ள கடலடி எரிமலைகள், இயற்கையான "தங்கத் தொழிற்சாலைகளாக" செயல்படுவதை ஜெர்மனி நாட்டு விஞ்ஞானிகள் குழு கண்டறிந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜெர்மனியைச் சேர்ந்த கடல்சார் புவியியல் நிபுணர்கள் குழு, நியூசிலாந்துக்கு அருகிலுள்ள ஆழ்கடல் பகுதிகளில் நீண்டகாலமாக ஆய்வு நடத்தி வந்தது. இதன் முடிவுகள் முன்னணி அறிவியல் இதழ்களில் தற்போது வெளியாகியுள்ளன.

பூமியின் மேற்பரப்பில் நாம் காணும் தங்கம், உண்மையில் கடலுக்கு அடியில் உள்ள மிகச் சிக்கலான புவியியல் மாற்றங்களால் உருவாகிறது என்பதை இந்த ஆய்வு விளக்குகிறது. கடலடித் தரைக்கு அடியில் உள்ள புவித்தட்டுகள் ஒன்றோடு ஒன்று மோதும்போதும் நகரும்போதும், அங்கு அதீத வெப்பமும் அழுத்தமும் உருவாகிறது.

இந்த அழுத்தத்தால் ஆழத்தில் உள்ள பாறைகள் உருகத் தொடங்குகின்றன. உருகிய பாறைகளிலிருந்து வெளிவரும் திரவங்களில் தங்கம் உருவாவதற்கான மூலக்கூறுகள் அதிகளவில் உள்ளன.

ஆராய்ச்சியாளர்கள் கடலடியில் எரிமலைக்குழம்பு வேகமாக குளிர்ந்து உருவான 66 "எரிமலைக் கண்ணாடி" (மாதிரிகளைச் சேகரித்துப் பரிசோதித்தனர். வழக்கமான பாறைகளை விட, இந்த மாதிரிகளில் தங்கத்தின் செறிவு பல மடங்கு அதிகமாக இருந்தது கண்டறியப்பட்டது.

கடலடியில் கந்தகத்துடன்  பிணைந்துள்ள தங்கம், பாறைகள் உருகும்போது பிரிந்து எரிமலைக்குழம்புடன் பயணிக்கிறது. பின்னர், கடலடியில் உள்ள 'வெப்பநீர்மத் துவாரங்கள்' எனப்படும் வெந்நீர் ஊற்றுகள் வழியாக வெளிப்பட்டு, குளிர்ந்த கடல்நீரில் பட்டவுடன் திடமான கனிமப் படிவங்களாக உறைகின்றன.

ஒரு காலத்தில் சாதாரண எரிமலைப் பாறைகளாகக் கருதப்பட்ட இந்தப் பகுதிகள், இப்போது தங்கம் மற்றும் செம்பு போன்ற மதிப்புமிக்க உலோகங்களின் மாபெரும் இருப்பைக் கொண்டிருக்கக்கூடும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கண்டுபிடிப்பு, பூமியின் வளங்கள் எவ்வாறு உருவாகின்றன என்பதைப் புரிந்துகொள்ள உதவுவது மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் ஆழ்கடல் கனிமச் சுரங்கத் திட்டங்களுக்கு ஒரு புதிய பாதையைத் திறந்துவிட்டுள்ளது.