மத்திய ஆப்பிரிக்காவில் தங்கச் சுரங்கம் சரிவு... 100-க்கும் மேற்பட்டோர் பலி!

 

 

மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு நாட்டில் உள்ள ஜம்போய் கிராமத்தில் அமைந்துள்ள தங்கச் சுரங்கம் திடீரெனச் சரிந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் பகுதியில் பல நூறு தொழிலாளர்கள் முறையான பாதுகாப்பு வசதிகள் இன்றிச் சுரங்கப் பணிகளில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

நிலச்சரிவு மற்றும் சுரங்கத்திற்குள் இருந்த பல சுரங்கப்பாதைகள் திடீரென இடிந்து விழுந்ததே இந்தப் பேரிடத்திற்குக் காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது. விபத்து குறித்துத் தகவலறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். எனினும் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

ஆப்பிரிக்க நாடுகளில் இதுபோன்று சிறிய அளவிலான சட்டவிரோதச் சுரங்கங்களில் பாதுகாப்பற்ற முறையில் பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் அடிக்கடி விபத்துகளில் சிக்குவது தொடர்கதையாகியுள்ளது. இந்தச் சோகச் சம்பவம் குறித்து உள்ளூர் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.