தங்கம் விலை மீண்டும் சரிவு... மாலை நேரத்தில் சவரனுக்கு ரூ.880 குறைந்தது!
சென்னையில் இன்று தங்கம் விலையில் பெரும் ஏற்ற இறக்கங்கள் நிலவி வரும் நிலையில், மாலை நேர வர்த்தகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளது. காலையில் விலை உயர்ந்து அதிர்ச்சியளித்த தங்கம், மாலையில் சரிவைச் சந்தித்திருப்பது பொதுமக்களுக்கும், நகைப்பிரியர்களுக்கும் சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலையில் சந்தை தொடங்கிய போது, ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,12,480 என்ற புதிய உச்சத்தில் விற்பனையானது. ஆனால், மாலை நேர வர்த்தகத்தில் சர்வதேசச் சந்தை நிலவரங்களின் மாற்றத்தால், தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 என குறைந்தது. இதன் மூலம் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,11,600க்கு விற்பனையாகி வருகிறது.
சர்வதேசப் பொருளாதாரச் சூழல் மற்றும் அமெரிக்கா - ஈரான் இடையேயான தற்காலிக அமைதி ஒப்பந்தம் போன்ற உலகளாவிய நகர்வுகள் காரணமாக, கச்சா எண்ணெய் விலை சரிவடைந்ததைத் தொடர்ந்து முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீதான முதலீடுகளை மாற்றி வருவதே இந்தத் திடீர் சரிவுக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.
ஒரே நாளில் தங்கம் விலை ஏறி, பின்னர் பெரும் சரிவைச் சந்தித்திருப்பது தங்கம் சந்தையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விலை வீழ்ச்சி வரும் நாட்களிலும் தொடருமா என்பதை நகை வியாபாரிகள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.