தங்கம் விலை வரலாறு காணாத சரிவு - ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,840 குறைந்தது!
தங்கம் விலை எப்போது குறையும் என்று ஏங்கிக் கொண்டிருந்த நடுத்தரக் குடும்பங்களுக்கும், நகைப்பிரியர்களுக்கும் இன்று சனிக்கிழமை ஒரு இமாலய மகிழ்ச்சிச் செய்தி கிடைத்துள்ளது. சர்வதேச சந்தையில் ஏற்பட்ட அதிரடி மாற்றங்களால், தமிழகத்தில் இன்று தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு 1,840 ரூபாய் வரை சற்றும் எதிர்பாராத விதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை புதிய உச்சங்களைத் தொட்டு சாமானியர்களுக்கு எட்டாக்கனியாக மாறி வந்தது. ஆனால், நேற்று முன்தினம் முதல் தங்கம் விலை படிப்படியாகக் குறையத் தொடங்கியது. நேற்று வெள்ளிக்கிழமை மட்டும் ஆபரணத் தங்கம் சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் 1,15,440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
நேற்றைய சரிவைத் தொடர்ந்து, இன்று சனிக்கிழமை காலை சந்தை தொடங்கிய உடனே தங்கம் விலையில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டது. அதன்படி, இன்று ஆபரணத் தங்கம் சவரனுக்கு மேலும் 1,840 ரூபாய் அதிரடியாகக் குறைந்து, ஒரு சவரன் 1,13,600 ரூபாய் என்ற நிலைக்குக் கீழ் இறங்கியுள்ளது.
அதேபோல், ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று 14,430 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று கிராமுக்கு 230 ரூபாய் குறைந்து 14,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளி விலையும் இன்று முன்னெப்போதும் இல்லாத அளவிற்குப் பாதாளத்தை நோக்கிச் சரிந்துள்ளது. வெள்ளி விலை இன்று கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 270 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இதன் காரணமாக, தொழிற்துறையினர் மற்றும் முதலீட்டாளர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் ஒரு கிலோ கட்டிய வெள்ளியின் விலை ஒரே நாளில் 10,000 ரூபாய் என்ற இமாலய அளவில் குறைந்து, தற்போது ஒரு கிலோ வெள்ளி 2,70,000 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.
சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் வர்த்தகம் கணிசமாக வீழ்ந்துள்ளதே உள்ளூர் சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த மெகா சரிவிற்கு முதன்மையான காரணம் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். சர்வதேச சந்தையில் 1 அவுன்ஸ் தங்கம் 148 டாலர்கள் வரை சரிந்துள்ளதன் நேரடி எதிரொலி இன்று தமிழகக் கடைகளில் அப்பட்டமாகத் தெரிகிறது.
தொடர்ந்து இரண்டு நாட்களாகத் தங்கம் விலை கணிசமாகக் குறைந்து, இன்று ஒரே நாளில் சவரனுக்கு 1,840 ரூபாய் சரிந்துள்ளதால், திருமண சுபகாரியங்களுக்கு நகை எடுக்கக் காத்திருப்பவர்கள் மற்றும் பொதுமக்கள் நகைக்கடைகளை நோக்கி விறுவிறுப்பாகப் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.