சர்வதேசச் சந்தையில் தங்கம் விலை உயர்வு.. தமிழகத்திலும் மீண்டும் உயரத் தொடங்கியது தங்கம் விலை!
சர்வதேசச் சந்தையில் நிலவி வரும் சாதகமானச் சூழ்நிலைகள் காரணமாகத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று கணிசமான உயர்வைச் சந்தித்துள்ளது. இதன் நேரடி எதிரொலியாக, சென்னை உள்ளிட்ட உள்ளூர் ஆபரணச் சந்தைகளிலும் தங்கம் விலை இன்று காலை முதலே அதிகரித்துள்ளது.
உலகளாவிய பொருளாதாரக் காரணிகள் மற்றும் புவிசார் அரசியல் சூழல்களுக்கு மத்தியில், சர்வதேசப் புல்லியன் சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளிக்கான தேவை மீண்டும் அதிகரித்துள்ளது. நேற்றைய வர்த்தக முடிவில் சரிவைச் சந்தித்திருந்த நிலையில், இன்று காலை ஒரே நாளில் அவுன்ஸிற்கு சுமார் $24 வரை உயர்ந்து, $4,048 என்ற புதிய உச்சத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. வெள்ளியின் விலையும் அவுன்ஸிற்கு $0.01 வரை லேசான உயர்வைக் கண்டு $59.45 ஆக வர்த்தகமாகி வருகிறது.
சர்வதேசச் சந்தை விலை மாற்றங்களின் அடிப்படையில், சென்னையில் இன்று காலை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 வரை உயர்ந்துள்ளது. இன்றைய நேரடி ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் இதோ:
22 கேரட் ஆபரணத் தங்கம் (1 கிராம் நேற்று ரூ.13,030-க்கு விற்பனையான ஒரு கிராம் தங்கம், இன்று ரூ.70 உயர்ந்து ரூ.13,100 ஆக விற்பனையாகிறது.
22 கேரட் ஆபரணத் தங்கம் (1 சவரன் / 8 கிராம்) சென்னையில் இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.560 அதிகரித்து ரூ.1,04,800 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் தூய தங்கம் (10 கிராம்) 10 கிராம் தூய தங்கத்தின் விலை இன்று ரூ.730 உயர்ந்து ரூ.1,37,550 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தங்கம் விலையைப் பின்பற்றி வெள்ளியின் விலையும் இன்று சற்று உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.235 என்ற அளவிலும், ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.2,35,000 ஆகவும் விற்பனையாகி வருகிறது.
அமெரிக்கக் கூட்டாட்சி வங்கியின் வட்டி விகிதக் கொள்கை குறித்த புதிய எதிர்பார்ப்புகள் மற்றும் உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாகத் தங்கத்தைத் தேர்வு செய்வதன் காரணமாகவே இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாகப் பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். நயாரா பங்க்-களில் பெட்ரோல், டீசல் விலை குறைந்து மக்கள் நிம்மதியடைந்த அதே நாளில், தங்கம் விலை மீண்டும் சவரனுக்கு ரூ.1 லட்சத்து 4 ஆயிரத்தைக் கடந்து எகிறியிருப்பது நகைப்பிரியர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.