22 காரட் தங்கத்திலும் ரீனியம் பொடி கலக்கப்படுகிறதா? வைர, நகை வியாபாரிகள் விளக்கம்! 

 

 

தங்கத்தில் 'ரீனியம்' என்ற உலோகம் கலக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வரும் நிலையில், இந்தக் குற்றச்சாட்டை வைரம் மற்றும் நகை வியாபாரிகள் சங்கம் மறுத்துள்ளது.

சீனாவில் தயாரிக்கப்படும் ரீனியம் பொடியை தங்கத்துடன் சேர்த்தால், அதன் எடை அதிகரிக்கும் என்றும், நகைகளைப் பரிசோதிக்கும் இயந்திரங்கள்கூட கலப்படத்தைக் கண்டறியாமல் 22 காரட் தங்கம் எனக் காட்டும் என்றும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பகிரப்படுகின்றன. இதனால், நகை வாங்குவோருக்கு ஒரு பவுனுக்கு ரூ.15 ஆயிரம் வரை இழப்பு ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது.

இதுகுறித்து மெட்ராஸ் வைரம் மற்றும் நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் ஷலானி கூறுகையில், சமூக வலைதளங்களில் பரவும் தகவல்கள் முற்றிலும் தவறானவை என்றும், ரீனியம் பொடியைத் தங்கத்துடன் சேர்க்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட வீடியோக்கள் பரப்பப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

 

இதற்கிடையே, ராஜஸ்தானில் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் ஒரு பரிசோதனையில் ரீனியம் கலந்த நகை, சில பரிசோதனைகளில் 22 காரட் எனக் காட்டியதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த விவகாரம் குறித்து அதிகாரப்பூர்வ விளக்கம் கோரி நகைத் துறையினரும் BIS அமைப்பை அணுகியுள்ளனர். எனவே, ரீனியம் கலப்படம் குறித்த தகவல்கள் இன்னும் முழுமையாக உறுதிப்படுத்தப்படவில்லை