தங்கம் தள்ளுபடி விலையில் விற்பனை - துபாயில் களைக்கட்டும் வியாபாரம்!
துபாய் தங்கச் சந்தையில் நிலவும் தற்போதைய அசாதாரண சூழல் காரணமாக, அங்கு தங்கம் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் போக்குவரத்துத் தடைகள் காரணமாக, துபாய் தங்க வியாபாரிகள் தங்களது கையிருப்பில் உள்ள தங்கத்தை விற்க முடியாமல் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர். இதன் விளைவாக, சர்வதேச சந்தை விலையை விடக் குறைவான விலைக்குத் தங்கத்தை விற்கத் தொடங்கியுள்ளனர்.
ஈரான் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகள் தங்களது வான்வெளியைப் பல பகுதிகளில் மூடியுள்ளதால், விமானம் மூலம் தங்கம் ஏற்றுமதி செய்வது கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. செங்கடல் பகுதியில் நிலவும் பாதுகாப்பற்ற சூழலால் கடல் வழி சரக்குப் போக்குவரத்தும் மந்தமடைந்துள்ளது.
ஏற்றுமதி தடைப்பட்டதால் வியாபாரிகளிடம் தங்கம் தேக்கமடைந்துள்ளது. பணப்புழக்கத்தை உறுதி செய்ய அவர்கள் தள்ளுபடியை அறிவித்துள்ளனர். சர்வதேச விலையை விட அவுன்ஸ் ஒன்றுக்கு சுமார் 30 டாலர் வரை குறைத்து விற்பனை செய்யப்படுகிறது. இந்திய மதிப்பில் இது ஒரு அவுன்ஸிற்கு சுமார் ரூ. 2,758 வரை தள்ளுபடியாகும்.
துபாயில் விலை குறைந்தாலும், அங்கிருந்து இந்தியாவிற்குத் தங்கத்தைக் கொண்டு வருவதற்கான காப்பீடு மற்றும் போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்துள்ளன. மேலும், மத்திய கிழக்கு மோதலால் சர்வதேச சந்தையில் தங்கத்தின் அடிப்படை விலை உயர்ந்திருப்பதால், இந்தத் தள்ளுபடி இந்திய நுகர்வோருக்குப் பெரிய அளவில் மாற்றத்தைத் தருமா என்பது சந்தேகம் தான். இருப்பினும், துபாயில் நேரடியாகத் தங்கம் வாங்குபவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாகக் கருதப்படுகிறது.