தங்கம் சவரனுக்கு ரூ.1,040 சரிவு... தொடர்ந்து விலை சரிவதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!

 

கடந்த சில மாதங்களாக ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வந்த தங்கம் விலை, கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருவது பொதுமக்களிடையேயும், குறிப்பாக இல்லத்தரசிகள் மத்தியிலும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலையானது கடந்த சில மாதங்களாகவே பெரும் ஏற்ற, இறக்கத்துடன் விசித்திரமான முறையில் பயணித்து வந்தது. ஓரிரு நாட்கள் விலை ஏறுவதும், பின்னர் அடுத்த சில நாட்களிலேயே மளமளவெனச் சரிவதுமாக இருந்து வந்தது. அந்த வகையில், நேற்று முன்தினம் (ஜூன் 06) தங்கம் விலை கிராமுக்கு ரூ.230 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,13,600-க்கு விற்பனையானது. இதனைத் தொடர்ந்து, வாரத்தின் முதல் நாளான இன்றும் (ஜூன் 08) தங்கம் விலை மேலும் படுபாதாளத்திற்குச் சரிந்துள்ளது.

இன்றைய காலை வர்த்தக நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.130 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.14,070-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், சவரனுக்கு ரூ.1,040 அதிரடியாகக் குறைந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,12,560-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த ஜூன் 03-ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.1,16,000-க்கு விற்பனையானது. அதற்கடுத்த நாளான ஜூன் 04-ஆம் தேதி சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.1,15,840- ஆகவும், ஜூன் 05-ஆம் தேதி மேலும் ரூ.400 குறைந்து ரூ.1,15,440- ஆகவும் சரிந்தது. அதன் தொடர்ச்சியாக, ஜூன் 06-ஆம் தேதி சவரனுக்கு ரூ.1,840 என்ற இமாலயச் சரிவைக் கண்டு ரூ.1,13,600-க்கு விற்பனையான தங்கம், இன்று (ஜூன் 08) மேலும் ரூ.1,040 குறைந்து ரூ.1,12,560 என்ற நிலையை எட்டியுள்ளது.

இதன் மூலம், கடந்த ஐந்து நாட்களில் மட்டுமே ஒரு சவரன் தங்கத்தின் விலை ஒட்டுமொத்தமாகச் சுமார் ரூ.3,440 வரை மளமளவெனக் குறைந்துள்ளதால், நகைப்பிரியர்கள் மற்றும் திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கு நகை எடுக்கத் திட்டமிட்டிருப்பவர்கள் பெரும் நிம்மதி அடைந்துள்ளனர்.

தங்கத்தின் விலை இப்படி அதிரடி வீழ்ச்சியைக் கண்டுள்ள அதே வேளையில், வெள்ளியின் விலையில் இன்று எவ்வித மாற்றமும் இன்றி நீடிக்கிறது. அதன்படி, சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.270-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,70,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சர்வதேசச் சந்தையில் நிலவி வரும் பல்வேறு பொருளாதார மாற்றங்கள் மற்றும் கரன்சி மதிப்புகளின் ஏற்ற இறக்கம் காரணமாகவே, உள்நாட்டுச் சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதாகப் பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.