வயிற்றுக்குள் மறைத்து ரூ.4 கோடி தங்கம் கடத்தல் - சென்னை விமான நிலையத்தில் 6 பேர் கைது!

 

சென்னை விமான நிலையத்தில் ரூ.4 கோடி மதிப்பிலான 2.6 கிலோ தங்கத்தைக் கடத்த முயன்ற வழக்கில், இரண்டு இலங்கை பயணிகள், இரண்டு சுங்கத்துறை ஹவில்தார்கள் மற்றும் எக்ஸ்ரே பிரிவைச் சேர்ந்த இரண்டு ஒப்பந்தப் பணியாளர்கள் என மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

துபாயில் இருந்து இலங்கை வழியாக சென்னை விமான நிலையத்திற்கு வந்த இரண்டு இலங்கை பயணிகள், கிரீன் சேனல் வழியாகச் சோதனை எதுவும் இல்லாமல் வெளியேற முயன்றனர். அவர்களின் மீது சந்தேகம் எழுந்ததைத் தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.

பயணிகளின் உடைமைகளைச் சோதித்தபோது எண்களும் கைப்பற்றப்படாததால், அவர்களை எக்ஸ்ரே பரிசோதனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அங்குள்ள எக்ஸ்ரே பிரிவைச் சேர்ந்த ஊழியர்களும், சுங்கத்துறை ஹவில்தார்களும் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட போலி எக்ஸ்ரே அறிக்கையைக் காட்டி பயணிகளிடம் தங்கம் எதுவும் இல்லை எனத் தப்பிக்க வைக்க முயன்றனர்.

விமான நிலையக் கண்காணிப்பில் உஷாராக இருந்த வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளுக்கு இந்தச் செயலில் சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து, சம்பந்தப்பட்ட பயணிகளுக்கு மீண்டும் தீவிர எக்ஸ்ரே பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த மறுசோதனையில், அந்த இரண்டு பயணிகளின் மலக்குடலுக்குள் தங்கக் கட்டிகள் ரகசியமாக மறைத்து வைக்கப்பட்டு கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

கடத்தலுக்கு உடந்தையாகச் செயல்பட்ட இரண்டு இலங்கை பயணிகள், இரண்டு சுங்கத்துறை ஹவில்தார்கள் மற்றும் எக்ஸ்ரே பிரிவு ஊழியர்கள் 2 பேர் என மொத்தம் 6 பேரையும் சுங்கத்துறை மற்றும் டி.ஆர்.ஐ. அதிகாரிகள் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விமான நிலையத்தில் அதிகாரிகளே கடத்தல்காரர்களுக்கு உடந்தையாக இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.