அட்சய திருதியைக்கு முதல் நாள் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை... அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!
தமிழகத்தில் தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே பெரும் ஊசலாட்டத்தில் இருந்து வருகிறது. நேற்று முன்தினம் விலை அதிகரித்த நிலையில், நேற்று யாரும் எதிர்பாராத விதமாக விலை கணிசமாக குறைந்தது. ஆனால், அந்த மகிழ்ச்சி நீடிக்காத வகையில் இன்று மீண்டும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இந்த திடீர் மாற்றத்தினால் நகை வாங்க திட்டமிட்டிருந்த பொதுமக்கள் மற்றும் இல்லத்தரசிகள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்து ரூ.1,14,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.150 உயர்ந்து ரூ.14,360-க்கு விற்பனையாகி வருகிறது. நேற்று சவரன் ரூ.1,13,680-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், ஒரே நாளில் இந்த அதிரடி உயர்வு ஏற்பட்டுள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப விலையில் இந்த அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.
தங்கத்தை போலவே வெள்ளி விலையும் இன்று ஏறுமுகத்தில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை 2,80,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி என இரண்டுமே விலை உயர்ந்துள்ளதால் நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் இன்று சற்று குறைவாகவே காணப்படுகிறது.