மதுப்பிரியர்களுக்கு ஷாக் ... மீண்டும்  மதுபானங்கள் விலை  உயர்வு! 

 

கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசு பொறுப்பேற்றது முதல் இலவச திட்டங்களுக்கான நிதித் தேவையை ஈடுகட்ட மதுபானங்களின் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 2026-27-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்த முதல்வர் சித்தராமையா, நாட்டிலேயே முதன்முறையாக புதிய வரி முறையை அறிவித்துள்ளார். இனி மதுபானங்களில் உள்ள ஆல்கஹால் அளவைப் பொறுத்து வரி விதிக்கப்படும் என்ற அதிரடி முடிவை அரசு எடுத்துள்ளது.

இந்த புதிய வரி விதிப்பு முறையை நடைமுறைப்படுத்துவதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையை கர்நாடக அரசு நேற்று முன்தினம் வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக மதுபானங்களின் விலை 20 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயன்படுத்தும் குறைவான விலை கொண்ட மதுபானங்களின் விலை கணிசமாக உயர வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

புதிய அறிவிப்பின்படி 180 மில்லி அளவுள்ள மதுபானத்தின் விலை 80 ரூபாயில் இருந்து 95 ரூபாயாக உயர உள்ளது. இது தவிர மற்ற ரக மதுபானங்களின் விலையும் 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் ஆல்கஹால் வீரியத்திற்கு ஏற்ப வரி விதிக்கும் முறை கர்நாடகத்தில் அமலுக்கு வருவது மதுப்பிரியர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.