வெள்ளிக்கிழமையில் தடாலடியாக சரிந்த தங்கம்... நகைப் பிரியர்கள் உற்சாகம்!
கடந்த இரண்டு நாட்களாக சரிவைக் கண்டு வந்த தங்கத்தின் விலையானது நேற்று மாலை திடீரென 1600 ரூபாய் உயர்ந்து நகைப்பிரியர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த அதிரடி ஏற்றத்தினால் கவலையில் இருந்த மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் இன்று காலை முதல் தங்கத்தின் விலை சற்று குறைந்து காணப்படுகிறது. கிராமுக்கு 50 ரூபாய் குறைந்துள்ளதால் தங்கம் வாங்குவோர் ஓரளவு நிம்மதி அடைந்துள்ளனர்.
இன்றைய நிலவரப்படி சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 14,050 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கம் 1,12,400 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் டாலரின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலையில் இந்த ஏற்ற இறக்கங்கள் தொடர்ந்து நீடித்து வருகின்றன.
தங்கத்தின் விலையைப் போலவே இன்று வெள்ளியின் விலையும் கணிசமாகச் சரிந்துள்ளதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வெள்ளி கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து 265 ரூபாய்க்கும், கிலோவுக்கு 5,000 ரூபாய் சரிந்து 2,65,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. திருமண விசேஷங்கள் நெருங்கும் வேளையில் இந்த விலை குறைப்பு நடுத்தர மக்களுக்குப் பெரும் பயனுள்ளதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.