எகிறி அடிக்கும் தங்கம்... ஒரே நாளில் ரூ1840 உயர்வு...  நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

 

 

சர்வதேச சந்தையில் நிலவி வரும் பொருளாதார மாற்றங்கள் காரணமாக, ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே 12) அதிரடியாக உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலை, இன்று காலை வர்த்தகம் தொடங்கிய முதலே ஏறுமுகமாகவே இருந்தது. குறிப்பாக, திருமண விசேஷங்கள் மற்றும் முகூர்த்த நாட்கள் நெருங்கி வரும் வேளையில், இந்தத் திடீர் விலை உயர்வு நகை வாங்கத் திட்டமிட்டுள்ள நடுத்தரக் குடும்பத்தினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 1,12,800 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், இன்று 1,840 ரூபாய் உயர்ந்து 1,14,640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், நேற்று 14,100 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிராம் தங்கம், இன்று 230 ரூபாய் அதிகரித்து 14,330 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தங்கத்தின் விலை வரலாற்றில் முதன்முறையாக இந்த அளவை எட்டியிருப்பது முதலீட்டாளர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது.

தங்கத்தின் மீதான இறக்குமதி வரி மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி போன்றவை இந்த விலை உயர்வுக்கு முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகிறது. வரும் நாட்களில் தங்கத்தின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாகச் சந்தை வல்லுநர்கள் கணித்துள்ளனர். இருப்பினும், விலை குறையும் வரை நகை வாங்குவதைத் தள்ளிப்போடும் மனநிலையில் மக்கள் உள்ளனர். இந்தத் திடீர் விலை உயர்வால் நகைக்கடைகளில் இன்று மக்கள் கூட்டம் சற்று குறைவாகவே காணப்பட்டது.