தங்கம் அதிரடி சரிவு... நகைப் பிரியர்கள் உற்சாகம்!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட ஆபரணத் தங்கத்தின் விலையானது, நகை வாங்கக் காத்திருக்கும் நுகர்வோர்களுக்கு மிகப்பெரிய நிம்மதி அளிக்கும் வகையில் இன்று ஜூன் 24 அன்று மிகக் கடுமையாகக் குறைந்துள்ளது. கடந்த 3 நாட்களாக மாற்றமின்றி ஒரு கிராம் ரூ. 13,600-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ. 1,08,800-க்கும் விற்கப்பட்டு வந்தது. இந்தச் சூழ்நிலையில் நேற்று ஒரு சவரனுக்கு ரூ. 320 வரை குறைந்ததைத் தொடர்ந்து, இன்றும் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருவது நடுத்தரக் குடும்பங்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேசச் சந்தையில் ஏற்பட்டுள்ள பல்வேறு பொருளாதார மாற்றங்கள் காரணமாகத் தங்கத்தின் மீதான முதலீடுகள் குறைந்து, அதன் விலையும் தொடர்ந்து சரிந்து வருவதாக விபரமறிந்த வர்த்தக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த புதிய மாற்றத்தின்படி, தமிழ்நாட்டில் நேற்று ஒரு கிராமுக்கு ரூ. 40 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 13,560-க்கும், ஒரு சவரனுக்கு ரூ. 320 குறைந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ. 1,08,480-க்கும் விற்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இன்று இந்த விலை வீழ்ச்சி மேலும் அதிகரித்துக் காணப்படுகிறது.
இன்றைய புதிய நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 210 வரை அதிரடியாகக் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 13,350-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் சவரனுக்கு ரூ. 1,680 வரை பெருமளவில் குறைந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ. 1,06,800-க்கு விறுவிறுப்பாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.