மலிவு விலையில் தங்கம்... கோல்டுமேன் சுரேஷ்குமார் ரூ32லட்சம் மோசடி!
ஐதராபாத் ஓல்டு சிட்டி பகுதியில் வசித்து வருபவர் பல்லபு சுரேஷ்குமார் என்கிற சூர்யா பாய். உடலில் எப்போதும் அதிகமான தங்க நகைகளை அணிந்து வலம் வருவதால் இவருக்குக் கோல்டுமேன் சுரேஷ்குமார் என்ற பெயரும் உண்டு. இவர் வெளிநாடுகளில் இருந்து குறைந்த விலைக்குத் தங்கம் வாங்கித் தருவதாகக் கூறிப் பொதுமக்களிடம் ஆசை வார்த்தைகளை வீசியுள்ளார். இதனை நம்பிய பலரும் அவரிடம் பெருமளவு பணத்தைக் கொடுத்துள்ளனர்.
பணத்தைப் பெற்றுக்கொண்ட சுரேஷ்குமார் சொன்னபடி தங்கம் தராமல் நீண்ட நாட்களாக ஏமாற்றி வந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பணம் கொடுத்தவர்கள் அவரை நேரில் சந்தித்து முறையிட்டனர். அதற்குப் பல காரணங்களைக் கூறிய சுரேஷ்குமார், அவர்களைச் சமாதானம் செய்ய 3 ஐபோன்கள் மற்றும் 20 லட்ச ரூபாய்க்கான காசோலையை வழங்கியுள்ளார். ஆனால் அதன் பின்னரும் அவர் கொடுத்த பொருட்களை ஒரு கும்பல் மிரட்டிப் பறித்துச் சென்றதாகத் தெரிகிறது.
சுரேஷ்குமார் தங்களை நம்ப வைத்து மொத்தம் 32 லட்சம் ரூபாய் வரை வாங்கி ஏமாற்றிவிட்டதாகப் பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். பொதுமக்களை ஏமாற்றிப் பண மோசடி செய்த குற்றத்திற்காகக் கோல்டுமேன் சுரேஷ்குமாரைக் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.