காலையில் இறங்கி மாலையில் ஏறிய தங்கம்... நகைப் பிரியர்கள் அதிர்ச்சி!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் கடந்த சில நாள்களாகத் தொடர்ந்து கடுமையான ஏற்ற, இறக்கங்கள் நீடித்து வருகின்றன. கடந்த 30 ஆம் தேதி தங்கம் விலையில் ஒரே நாளில் இருமுறை மிகப்பெரிய அளவில் மாற்றம் காணப்பட்டது. அன்று காலையில் சவரனுக்கு ரூ. 2160 வரை சரிந்து நகைப் பிரியர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
ஆனால் அந்த மகிழ்ச்சி நீடிக்காத வகையில் மதியத்திற்கு மேல் சர்வதேச காரணங்களால் விலை தலைகீழாக மாறியது. காலையில் எவ்வளவு வேகமாகத் தங்கத்தின் விலை சரிந்ததோ, அதே வேகத்தில் மதியத்திற்கு மேல் மீண்டும் மளமளவென அதிகரிக்கத் தொடங்கியது. மதிய வர்த்தக நிலவரப்படி கிராமுக்கு ரூ. 170-ம், சவரனுக்கு ரூ. 1360-ம் திடீரென உயர்ந்து சந்தையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதாரச் சூழல் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருவதுமே இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. இத்தகைய திடீர் மாற்றங்களால் சாமானிய மக்கள் மற்றும் தங்க முதலீட்டாளர்கள் தங்களின் முதலீடுகளைச் செய்யும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று பொருளாதார நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். இந்த மாத தொடக்க நாளான இன்றும் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 வரை குறைந்து ஒரு சவரன் ரூ. 104800-க்கு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.