அட்சய திருதியை முன்னிட்டு நகைக்கடைகளில் அலைமோதிய பெண்கள் கூட்டம்!
அட்சய திருதியை முன்னிட்டு தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் நகைக்கடைகளில் மக்கள் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. "அட்சயம்" என்றால் குறையாதது என்ற நம்பிக்கையில், ஏழை முதல் பணக்காரர்கள் வரை அனைவரும் தங்களால் இயன்ற தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.
இன்று அட்சய திருதியை திருநாளை முன்னிட்டு, திண்டுக்கல் நகரில் உள்ள முக்கிய நகைக்கடைகள் அதிகாலை 6 மணிக்கே திறக்கப்பட்டன. காலை முதலே "தங்கம் வாங்கினால் செல்வம் பெருகும்" என்ற நம்பிக்கையில் பெண்கள் கடைகளுக்குப் படையெடுக்கத் தொடங்கினர்.
வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் நகைக்கடைகள் சார்பில் பல்வேறு செய்கூலி, சேதாரம் தள்ளுபடி மற்றும் சிறப்புப் பரிசுகள் அறிவிக்கப்பட்டிருந்தன. வசதி படைத்தவர்கள் பவுன் கணக்கில் புத்தம் புதிய மாடல் நகைகளைத் தேர்வு செய்து வாங்கிச் சென்றனர். நடுத்தர வர்க்கத்தினர் தங்க விலை ஏற்றத்தையும் பொருட்படுத்தாமல், ராசியான நாளில் தங்கம் வாங்க வேண்டும் என்ற நோக்கில் 2 கிராம் மோதிரம், கம்மல் மற்றும் வெள்ளிப் பொருட்களை வாங்கி மகிழ்ந்தனர்.
நகைக்கடைகளில் கூட்டம் வழக்கத்தை விட இரண்டு மடங்கு அதிகரித்ததால், திண்டுக்கல்லின் முக்கிய வீதிகளான மேற்கு ரத வீதி, கிழக்கு ரத வீதி, மெயின் ரோடு, மாநகராட்சி அலுவலக சாலை ஆகிய பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் ஊர்ந்து சென்றதால் பொதுமக்கள் சற்று சிரமத்திற்கு உள்ளாகினர். இருப்பினும், கையில் வாங்கிய தங்க நகைகளுடன் பெண்களின் முகத்தில் மகிழ்ச்சி ததும்பியது.