தங்க முலாம் பூசப்பட்ட கொழுக்கட்டை... கிலோ ரூ.27,000க்கு விற்பனை!

 

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் தயாரிக்கப்பட்டுள்ள தங்க முலாம் பூசப்பட்ட ஆடம்பர மோதகம் ஒன்று சமூக வலைதளங்களிலும் மக்களிடையேயும் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

நாசிக் பகுதியில் உள்ள பிரபல இனிப்பகமான 'சாகர் ஸ்வீட்ஸ்' கடந்த 2021-ஆம் ஆண்டு கிலோ ரூ.12 ஆயிரத்திற்கு அறிமுகப்படுத்திய இந்தத் தங்க மோதகம், தற்போது தங்கம் மற்றும் உலர் பழங்களின் விலை உயர்வு காரணமாக இந்த ஆண்டு கிலோ ரூ.27,000 வரை விற்கப்படுகிறது.

முந்திரி, பாதாம், பிஸ்தா, பாலாடைக்கட்டி (மாய்), குங்குமப்பூ, ஏலக்காய் தூள் மற்றும் நெய் ஆகியவற்றுடன் 24 காரட் உண்ணக்கூடிய தங்க முலாம் கொண்டு இந்த ஆடம்பர மோதகம் பிரத்யேகமாகத் தயாரிக்கப்படுகிறது.

முழுக்க முழுக்க காட்சி அழகுக்காகவும் பெருமைக்காகவும் மட்டுமே இத்தகைய பலகாரங்கள் வாங்கப்படுகின்றன. இதனிடையே, உணவில் தங்கம் போன்ற உலோகங்களை உட்கொள்வது உடலுக்கு நச்சுத்தன்மையை ஏற்படுத்தக்கூடும் என மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்து வருவது குறிப்பிடத்தக்கது.